Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வுக்கு எதிராக 13-ம் தேதி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டங்கள் தமிழகத்தில் நாளுக்கு, நாள் தீவிரமடைந்து வருகின்றன. மக்களுக்கு பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதனிடையே, அனிதா மரணம் மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சியில் இன்று கண்டனப் பொதுக்கூட்டம்  என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து திருச்சி பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை தடை விதித்தது. ஆனால், தடையை மீறி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், வீரமணி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம்

அப்போது பேசிய ஸ்டாலின், "திருச்சிக்கு தி.மு.க-வில் மறுக்க முடியாத, அழிக்க முடியாத வரலாறு உண்டு. 1957ல் தேர்தலில் போட்டியிடுவதை அறிவித்த இடம் திருச்சிதான். அண்ணாவின் மறைவுக்கு தலைவர் கலைஞர், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கங்களை அறிவித்த பெருமை திருச்சி மாவட்டம் என்பது வரலாறு. தமிழகத்திலேயே தி.மு.க மாநில மாநாடு அதிகம் நடத்தப்பட்ட இடம் திருச்சிதான். அனிதாவின் தந்தை திருச்சியில் மூட்டை சுமந்து கூலி வேலை செய்து பணியாற்றுகிறார். அதனால்தான் கண்டன கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது.


உச்சநீதிமன்றம் தடை போட்டிருக்கிறதே என சந்தேகங்கள் நிலவியது. அந்த செய்தி வந்தவுடன்  மாநகர காவல் ஆணையர் துணிச்சலோடு வந்து எங்களிடத்தில், 'தென்னூர் உழவர் சந்தையில் அனுமதி வழங்கியிருந்த கூட்டத்துக்கு நீதிமன்ற உத்தரவால் அனுமதி மறுக்கப்படுகிறது' என அறிக்கை ஒன்றை கையொப்பமிட்டு தந்தார்கள். அவர்கள் சொல்வதை ஏற்கிறோம். அவர்களிடம் உச்சநீதிமன்றத்தின் நகல் கேட்டோம். இல்லை என மறுத்தார்கள். இதுகுறித்து நமது மூத்த வழக்கறிஞர்கள் ஏற்கெனவே விசாரித்து உண்மையான நிலையை விளக்கினார்கள். பொதுக்கூட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை போடவில்லை என விளக்கினார்கள்.
இந்தக் கூட்டத்துக்கு மாநில அரசின் காவல் துறைதான் தடை போட்டுள்ளது. மாநில உரிமை நசுக்கப்படுவதற்கு எதிராக கூடி இருக்கிறீர்கள்.

ஸ்டாலின்

கல்வி உரிமை பறிக்கப்பட்டதால், அனிதா உயிர் பறிக்கப்பட்டுள்ளது. 12 வருடம் படித்து 1176 மதிப்பெண் வாங்கிய மாணவியின் திறமையை, மூன்று மணி நேரத்தில் மதிப்பிடுவது பல மாணவர்களின் நிலைமையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது .நீட் முடிவில் முதல் 25 இடம் வட மாநிலத்தவர்கள். 7-ம் இடம் தென் மாநிலத்தவர்கள். இதைவிட வெட்கக் கேடு என்ன என்றால் தமிழ்நாடு அதில் இடம் பெறவில்லை. காரணம் மத்திய பாடத்திட்ட கேள்விகள்தான். பா.ஜ.க-வினர் திட்டமிட்டு மாநிலக் கல்வி தரமில்லை என அவதூறுப் பிரசாரம் பரப்புகிறார்கள்.

தமிழக மாணவர்களை கொச்சைப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டை விட இந்தியாவில் தரமான கல்வி முறை எங்காவது உண்டா.? இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்  முத்துலெட்சுமி ரெட்டி நீட்  எழுதியா வந்தார். இந்தியாவின் மருத்துவ தலைநகரம் சென்னை. அப்படியானால் தமிழக மருத்துவர்கள் நீட் தேர்வு வந்தார்கள? 

பா.ஜ.க தலைவர்களின் வீட்டில் உள்ள மருத்துவர்கள், நீட் தேர்வு எழுதி தான் வந்தார்களா. ?உலகிலேயே திறமையான  மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுகிறார்கள். நாளைக்கு பா.ஜ.க கூட்டம் நடத்த இருக்கிறது. தமிழிசை பத்திரிகைகளுக்கு அறிவித்துள்ள அறிக்கையில், எதிர்க்கட்சி பிரசாரத்தை முறியடிக்கிற விதம் என கூறியுள்ளார். நான் கேட்கும் பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல முடியுமா? தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள்.

ஸ்டாலின்


நீட் தேர்வு தொடர்பாக, தமிழக அரசால் இரண்டு மசோதாக்கள் அனுப்பப்பட்டது என்னவாயிற்று. ஓராண்டுக்கு விலக்கு என்றீர்களே. விலக்கு என்னாச்சு என்பதையும், அவசரச் சட்டம் என்னாயிற்று என்பதையும், பதில் சொல்ல வேண்டும். கறுப்பு பணத்தை மீட்போம், ஒவ்வொரு வங்கியிலும் செலுத்தும் உறுதிமொழி என்னாயிற்று? இறைச்சி விற்பனை அவசரச் சட்டம் கொண்டுவந்தவர்கள்  நீட்டுக்கு கொண்டுவரவில்லை ஏன்?  மீனவர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? விவசாயிகள் பிரச்னைக்காக அய்யாக்கண்ணு போராடுகிறாரே அவரை மோடி சந்தித்தது உண்டா? இதற்கெல்லாம் மனசாட்சியோடு பதில் சொல்லாவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பல போராட்டங்களை நடத்தி விட்டுதான் இங்கே கூட்டம் நடத்தப்படுகிறது.


நீட் தேர்வுக்கு எதிராக, வருகின்ற 13-ம் தேதி மாவட்ட தலைநகர்களில் எதிர்கட்சிகள் சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன்பிறகு அடுத்தக்கட்டமாக மத்திய மாநில அரசுகளின் கவனத்தை திசை திருப்புகிற அறிவிப்பு வெளியாகும் அதுவரை காத்திருங்கள். ஆட்சியை தூக்கி எறியவும் நடவடிக்கைகள துவங்கும். நாளை மறுநாள் கவர்னரைச் சந்திக்கிறபோது இதுதான் கடைசிச் சந்திப்பு எனச் சொல்லி இனி சந்திக்க மாட்டோம் . இந்த ஆட்சி கவிழ்கிற வரைப் போராட்டம் தொடரும் என்றுதான் கவர்னரிடம் வலியுறுத்துவோம்" என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close