Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`பிரதமர் மோடியே பாராட்டினார்!'- நெகிழும் அமைச்சர் விஜயபாஸ்கர்

உடலுறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது என்றும், இதற்காக மோடி பாராட்டு தெரிவித்துள்ளதாகவும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

விஜயபாஸ்கர்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்ப நலத்துறை சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, கலெக்டர் இராசாமணி, எம்.பி டி.ரத்தினவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

உடல் உறுப்புதான விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,

'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு அவர்களே தலைவராக இருந்து அர்ப்பணிப்புடன் வழி நடத்தினார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் மூலம் இலவசமாக உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூபாய் 35 இலட்சம் வரை உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக தமிழக அரசு பயனாளிகளுக்கு வழங்குகிறது. இந்தியாவிலேயே இதுதான் மிக அதிகமான தொகை.

இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக விருதினை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இந்திய பிரதமர் தன்னுடைய மனதின் குரல் பதிப்பில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் மற்ற மாநிலங்களுக்குத் தமிழகம் ஒரு முன்மாதிரி மாநிலமாக சிறந்து விளங்குவதாகப் பாராட்டியுள்ளார்.

விஜயபாஸ்கர்

மேலும் மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் செயற்கை சுவாசக் கருவி மூலமாக இயங்குவதால் இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிட்டால் எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் தானாகவே நின்றுவிடும். எனவே மூளைச் சாவு அடைந்தவரின் உறவினர்கள் ஒருவிநாடி கூடத் தாமதிக்காமல் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும்.

இதன்படி மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம், இதயவால்வு, இரத்த குழாய், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், தோல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் மூலம் 7 பேருக்கு வாழ்வளிக்க முடியும். மருத்துவ துறையை சார்ந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் குழுவினர்கள் ஆலோசகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவல்துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திட தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகையான தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலமாகத் தொடர்ந்து விளங்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு முன்வர வேண்டும்' என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close