Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆட்சிக் கவிழ்ப்பு அஸ்திரத்தைக் கையில் எடுக்கும் ஸ்டாலின்!

“தமிழகத்தில் நடைபெற்று வரும் குதிரைபேர ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வேலைகள் ஆரம்பித்துவிட்டது” என்று திருச்சியில் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். ஆட்டம் கண்டு வரும் அ.தி.மு.க அரசுக்கு ஸ்டாலினின் இந்த அறிவிப்பு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

மு.க.ஸ்டாலின்

திருச்சியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “நீட் தேர்வை எதிர்த்து போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தகவல்கள் தடைகளாக வந்தாலும், அதையெல்லாம் உடைத்தெறியக்கூடிய வகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொண்டது மகிழ்ச்சி. மருத்துவராகிவிடுவோம் என்ற கனவோடு இருந்த அனிதாவின் உயிரைப் பறித்தவர்கள் யார்? அனிதாவுக்கு உரிய கல்வியை இந்த அரசு மறுத்ததன் விளைவாக அவர் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த நாடு நன்றாக உணர்ந்திருக்கிறது.‬

2017 நீட் தேர்வின் முடிவை அகில இந்திய அளவில் எடுத்துப் பார்த்தால், முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் 18 பேர் வடமாநில மாணவர்கள். வெறும் 7 பேர்தான் தென்மாநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் வெட்கக்கேடு என்னவென்றால், அதில் ஒருவர்கூட தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கிடையாது. காரணம்? நீட் கேள்விகள், சி.பி.எஸ்.சி-யின் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் கேட்கப்பட்டதுதான்.‬

‪மத்திய பாடத்திட்டத்தில் கேள்விக் கேட்டுவிட்டு, தமிழக கல்வி மோசம் என்று பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவர்கள், தவறான ஒரு பொய்ப் பிரசாரத்தைத் திட்டமிட்டு நாட்டில் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். நாளை இதே திருச்சியில் இன்று எதிர்க்கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டத்துக்கு எதிராக பா.ஜ.க சார்பி்ல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்கிறார்கள். ஆனால், பா.ஜ.க-வினருக்கு நான் கேட்கும் கேள்விகள், நீட் தேர்வு பிரச்னை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்ட அந்த இரண்டு மசோதாக்கள் என்னவாயிற்று? டேபிளுக்கு அடியில் பூட்டி வைத்தீர்களா?‬ ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கடைசிவரை சொல்லி, நம்பவைத்து, கழுத்தை அறுத்தீர்களே, அந்த ஓராண்டு விலக்கு இப்போது என்னாயிற்று? அவசரச் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்று சொல்லிவிட்டு, பிறகு பல்டி அடித்தீர்களே, ஏன்? ‬

‪இறைச்சிக்காக மாடுகளை விற்பதைத் தடுக்க அவசர அவசரமாக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினீர்களே, இந்த நீட் தேர்வுக்காக ஒரு அவசரச் சட்டத்த்தை இயற்றும் யோக்கியதை, தெம்பு, திராணி இல்லையா? மீனவர்களைப் பாதுகாப்போம் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தீர்களே, மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகும் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா? இன்றைக்கு டெல்லியில் விவசாயிகள் நாள் கணக்கில், மாதக்கணக்கில் பல கோணங்களில் போராடிக்கொண்டிருக்கிறார்களே இதுவரையில், பிரதமர் மோடி, அவர்களை அழைத்து சந்தித்ததுண்டா? இதற்கெல்லாம் நாளை நடைபெறவுள்ள பி.ஜே.பி-யின் கூட்டத்தில் மனசாட்சியின் மீது கைவைத்து பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

மேலும் நீட் தேர்வுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் வரும் 13-ம் தேதி அன்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் பெரிய அளவில் நடத்தபடும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள் கிடைத்தப் பிறகு அனைத்துக்  கட்சித் தலைவர்களுடன் கலந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசும் ஸ்டாலின்

இறுதியாக ஸ்டாலின், “தமிழ்நாட்டில் நடக்கும் இந்தக் ‘குதிரை பேர’ ஆட்சியை ஒழித்துவிட்டால், நிச்சயம் இதற்கான முடிவு வந்துவிடும். அதற்கான பணிகள் முழுமையாக நடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பு ஆளுநரைச் சந்திக்க இருக்கிறோம். அப்படி சந்திக்கின்றபோது, அவர்களிடத்தில், இந்த பிரச்னைக்காக உங்களைச் சந்திக்கக் கடைசியாக வருவது இதுதான். இனி இதுகுறித்து உங்களைச் சந்திக்க நாங்கள் வரமாட்டோம். எனவே, உரிய நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால், தமிழக மக்களை நாங்கள் ஒன்றுதிரட்டுவோம். அது மிகப்பெரிய ஒரு போராட்டமாக இருக்கும். இந்த ஆட்சி கவிழும் வரையில் அந்தப் போராட்டம் தொடரும் என்று தெளிவாகச் சொல்லப்போகிறோம்” என்று அதிரடியாக அறிவித்தார்.

தினகரன் தரப்பு ஏற்கெனவே ஆளுநரிடம் முதல்வரை மாற்ற வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆளுநரைச் சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று மனு அளித்தனர். ஆனால், இதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் ஆளுநர் எடுக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் அணிகளாகச் சிதறிக் கிடக்கும் ஆட்சி இருக்க வேண்டாம் என்ற குரல் ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிராக ஒலித்து வந்த நிலையில், இதுவரை மென்மையான போக்கையே கையாண்டு வந்த ஸ்டாலின் இப்போது ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 24 சட்டமன்ற உறுப்பினரக்ளுக்கு மேல் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகரிடம் மனு அளித்தால் அதன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது மிகப்பெரிய எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்து வரும் நிலையில் அவர்கள் தரப்பிலிருந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரினால், கொண்டு வரவேண்டிய நெருக்கடியும் ஆளுநருக்கு இருக்கிறது. இதனால், ஏற்கெனவே சிக்கலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசுக்குப் புதிய சிக்கல் இப்போது தி.மு.க வடிவில் வருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close