வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (09/09/2017)

கடைசி தொடர்பு:12:45 (09/09/2017)

நீட் தேர்வை எதிர்த்து களத்தில் இறங்கிய பள்ளி மாணவிகள்!

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துக்கொண்ட அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் நுழைவுத் தேர்வுமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் இளைஞர்கள்.

அரசியல் அமைப்பாகவும் தன்னெழுச்சி கூட்டமாகவும் இணைந்து உண்ணாவிரத போராட்டம், சாலை மறியல் என பல்வேறு முறைகளில் நீட் தேர்வுக்கு எதிரான தங்களின் கருத்தை நாள்தோறும் பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ -மாணவிகள் நீட்டுக்கு எதிராக வகுப்புகளை புறக்கணிக்க துவங்கிய போராட்டத்தில் தற்போது பள்ளி மாணவர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் சாலை மறியல் வரை சென்றது. அந்த வகையில் திருப்பூர் மாநகரில் இயங்கி வரும் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இன்று பள்ளி நுழைவாயில் முன்பு நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். நீட் தேர்வு முறைக்கு எதிரான பதாகைகளை ஏந்திக்கொண்டு பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்தியதால் ஜெய்வாபாய் பள்ளி முன்பாகக் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.