மாணவர்களின் கல்வி உதவித்தொகை அதிரடி குறைப்பு! தமிழக அரசு திடீர் நடவடிக்கை

அரசு ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12.5 லட்சம் வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை ரூ.4 லட்சமாக தமிழக அரசு குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாணவர்கள் கல்வி உதவித் தொகையை முழுமையாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், தலித் கிறிஸ்துவர் மாணவர்களுக்கு சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டண நியமனக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை உதவித் தொகையாகச் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசே செலுத்தி வந்தது. தற்போது இந்த உதவித் தொகை மூன்றில் ஒரு பங்காகத் திடீரென வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. இது அரசு ஒதுக்கீட்டில் உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், தலித் கிறித்தவ மாணவர்கள் மீது தமிழக அரசு தொடுத்துள்ள கடுமையான தாக்குதலாகும். ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெறுவதைத் தட்டிப்பறிக்கும் செயலாகும். சமூக நீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அரசு ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12.5 லட்சம் வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை ரூ.4 லட்சமாகவும், பொறியியல் கல்வி மாணவர்களுக்கு ரூ.85 ஆயிரம் வழங்கப்பட்டதை ரூ.70 ஆயிரமாகவும் குறைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனால் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்விக்குச் செல்ல முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அ.தி.மு.க அரசின் கல்வி உதவித் தொகை குறைப்பு குறிப்பாகத் தலித் - பழங்குடியின மக்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர வாழ்நிலை பகுதி மக்கள் திரளைச் சார்ந்த மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்டு உயர்கல்வி பெறும் உரிமையைத் தடுப்பதாகும்.
எனவே, கல்வி உதவித் தொகையை அடாவடித்தனமாக வெட்டிச் சுருக்கி அடித்தட்டு மக்கள் உயர்கல்வி பெறும் உரிமையை தட்டிப்பறிக்கும் நடவடிக்கையை அ.இ.அ.தி.மு.க அரசு கைவிட வேண்டுமெனவும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையைத் திரும்ப பெற வேண்டுமெனவும், கல்விக்கட்டண நியமனக்குழு  நிர்ணயிக்கும் கல்வி கட்டணத்தை ஏற்கெனவே வழங்கப்பட்டு வருவதைப்போல் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் மற்றும் தலித் கிறிஸ்துவ மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை முழுமையாக வழங்கிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!