அமைச்சர்களுக்கு எதிராக கோஷமிட்ட மாணவர்கள்! தடியடி நடத்தியது போலீஸ்

அமைச்சர்களுக்கு எதிராக கோஷமிட்ட மாணவர்கள்

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டம்  நடந்துவருகின்றன. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள  எம்.ஜி.ஆர் சிலை முன்பு இந்திய மாணவர் சங்கத்தைச் சார்ந்த மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், எம்.ஜி.ஆர் சிலையின் மீது ஏறி, நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். அதேபோன்று, திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ள அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வந்திருந்ததால், அமைச்சர் விஜயபாஸ்கரை அந்தக் கும்பல் முற்றுகையிட்டு பிரச்னை செய்யும் எனத் தகவல் பரவியதால் பரபரப்பு உண்டானது.

இதனால் பதறியடித்துக்கொண்டு அங்கே வந்த திருச்சி  கன்டோன்மென்ட் உதவி ஆணையர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுகட்டாயமாக வேனில் ஏற்ற முயற்சி செய்தனர். ஆனால், மாணவர்கள் பலர் தரையில் படுத்துக்கொண்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது போலீஸார் மாணவர்களைக் கடுமையாகத் தாக்கி வேனில் ஏற்றி அழைத்துச் சென்றார்கள். இந்நிலையில் அந்த வழியே அரசு நிகழ்ச்சி முடிந்து அமைச்சர்கள்  செல்ல, அவர்களுக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!