நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்! அப்புறப்படுத்தும் சென்னை போலீஸ்

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் அரசுப் பள்ளி மாணவிகள் இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மாணவிகளை போலீஸார் அப்புறப்படுத்தி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வால் மருத்துவராகும் கனவை இழந்த அரியலூர் மாணவி அனிதா தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் வெடித்தது. இதனிடையே, தமிழகத்தில் நடக்கும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்தலாம் என்றும் அதே நேரத்தில் சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்டவற்றை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இன்று மகாலிங்கபுரத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் மற்றும் ஆசிரியைகள் சமாதானப்படுத்தினர். அதையும் மீறி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதையடுத்து, மாணவிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கினர். அப்போது, ''வேண்டாம் வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம், தடை செய் தடை செய் நீட் தேர்வை தடை செய்'' என்று முழக்கமிட்டுவாறு மாணவிகள் மறியல் செய்து வருகின்றனர். இதனிடையே, மூன்று மாணவிகளை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், கொந்தளித்த மாணவிகளை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயன்றனர். முடிவில் ஆசிரியைகளைக் கொண்டு மாணவிகளைக் கலைந்துபோகச் செய்தனர். பள்ளிக்கு சென்ற மாணவிகள் பள்ளி வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மாணவிகளை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவிகள் அறிவித்துள்ளதால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!