வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (09/09/2017)

கடைசி தொடர்பு:16:45 (09/09/2017)

'தறி ஓட்டி தந்தை என்னை படிக்க வைத்தார்'- நீட்டால் எம்பிபிஎஸ் சீட்டை இழந்த மாணவர் கண்ணீர்

''எங்கப்பா இரவு, பகல் பாராமல் கஷ்டப்பட்டு தறி ஓட்டி என்னை படிக்க வைத்தார். அதை உணர்ந்து நானும் வெறித்தனமாகப் படித்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் எடுத்தேன். இடி விழுந்தாற்போல வந்த நீட் தேர்வால் குடும்பமே சோகமானது. என் கனவும் சிதைந்துபோனது'' என்கிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரஜினிரகு.

வீட்டில் தறி ஓட்டிக்கொண்டிருந்த ரஜினிரகுவிடம் பேசியபோது, ''எங்க அப்பா பேரு வடிவேல். அம்மா பெருமாயி. என் உடன் பிறந்தவர்கள் அக்கா கெளசல்யா, அண்ணன் அறிவழகன். நான் கடைக்குட்டியாகப் பிறந்தவன். நாங்கள் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கே.கே.நகர் பகுதியில் குடியிருக்கிறோம். அப்பா தறி தொழிலாளி. அம்மா காட்டு வேலைக்குப் போவாங்க. நாங்க ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் சின்ன வயதில் இருந்தே நன்றாகப் படிப்பேன். நீ டாக்டர் ஆக வேண்டும் என்று குடும்பத்தினரும் கிராமத்தினரும் சொல்லிச்சொல்லி வளர்த்ததால் டாக்டர் என்பது என் கனவாகவே இருந்தது. அப்பா இரவு பகல் பாராமல் தறி ஓட்டி அதில் கிடைக்கின்ற காசுகளைக் குருவி சேர்ப்பதைப்போல சேர்ந்து எங்க கிராமத்துக்கு அருகில் உள்ள சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார். நான் பத்தாம் வகுப்பில் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தேன்.

பத்தாம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்களால் என் கனவும், என் குடும்பத்தினர் கனவும் மேலும் உறுதிப்படுத்தியது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200-க்கு 1190 மதிப்பெண்களும் மெடிக்கல் கட் ஆஃப் 200-க்கு 199.5 மதிப்பெண் இருந்தது. நிச்சயம் எனக்கு கிடைத்து விடும் என நம்பினேன். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தபோது என் மார்க்கைப் பார்த்துட்டு எங்க அப்பா ஒரு வாரமாக கஸ்டப்பட்டு தறி ஓட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து கேக் வாங்கி எங்க கிராமத்துக்கே கொடுத்து குதூகலம் அடைந்தார். என் கவலையெல்லாம் தீர்ந்தது. 'பையன் டாக்டர் ஆயிடுவான்' என அக்கம் பக்கத்தினர், உறவினர்களிடம் சொல்லி மகிழ்ந்தார். நானும் என் நண்பர்களிடம் எப்படியும் மெடிக்கல் சீட் கிடைத்துவிடும் என சொல்லிக்கொண்டிருந்தேன். இந்தச் சூழ்நிலையில் அரக்கன்போல வந்தது நீட் தேர்வு. இந்த நீட் தேர்வு எழுத வேண்டும்  எனச் சில அரசியல் வாதிகளும், எழுத தேவையில்லை என அரசியல் வாதிகளும் சொல்லி எங்கள் வாழ்க்கையில் விளையாடினார்கள். நாங்கள் குழப்பமான மனநிலையிலேயே தேர்வு அறைக்குள் சென்றோம். எங்கள் படிப்புக்குச் சம்பந்தமே இல்லாத கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். தெரிந்ததை மட்டும் எழுதி நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 201 மதிப்பெண்ணும் எடுத்தேன். எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை.

இதனால் ரொம்ப மன வேதனை அடைந்தேன். நான் டாக்டர் ஆக வேண்டும் என்ற என்னுடைய கனவும், என்னை விட அதிகமாக அக்கறையாக இருந்த என் குடும்பத்தினர் கனவும் நீட் தேர்வால் சிதைந்துவிட்டது. தற்போது என் குடும்பமே சோகமயமாகிவிட்டது. ஏதோ வாழ்க்கைக்கு படித்தாக வேண்டும் என்ற விரக்தியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறேன். தற்போது என் அக்கா திருமணத்துக்காக வீட்டுக்குள் வந்துள்ளேன். நீட் தேர்வு மூலம் திட்டமிட்டு மாநில கல்வித் திட்டத்தை ஒழிக்க நினைக்கிறார்கள். நீட் தேர்வு தொடந்து நடைமுறையில் இருந்தால் யாரும் மாநில கல்வித் திட்டத்தில் படிக்க மாட்டார்கள். அப்படி மாநில திட்டத்தில் படித்தால் உயர் கல்விக்குப் போக முடியாத நிலையை உருவாக்குவார்கள். ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவு சிதைந்துபோகும். அதனால் நீட் தேர்வு அவசியமில்லை'' என்றார் கண்ணீருடன்.