போக்குவரத்து ஊழியர்கள் செப்டம்பர் 24 முதல் வேலைநிறுத்தம்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் செப்டம்பர் 24-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கான 12 வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிந்தது. ஆனால், இதுவரை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சென்னை பல்லவன் இல்லத்தில் அரசு மற்றும் ஊழியர்கள் தரப்பில்
13 வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதில், உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில், வேலைநிறுத்த நோட்டீஸைப் போக்குவரத்துத் துறை செயலாளருக்கு அவர்கள் தபாலில் அனுப்பி வைத்துள்ளனர். அதில், செப்டம்பர் 24-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், அவற்றில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க இருப்பதாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான உறுதிமொழியும் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!