வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (09/09/2017)

கடைசி தொடர்பு:13:01 (10/09/2017)

ஜெயந்தி நடராஜன் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை!

jayanthi natarajan

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ-யின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஜெயந்தி நடராஜன். இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார். 2013-ம் ஆண்டு திடீரென அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதும் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர், எந்த அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜெயந்தி நடராஜன் வீட்டுக்கு வந்த சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்தவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் ஜெயந்தி நடராஜனின் அலுவலகங்கள் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருந்தபோது சுற்றுச்சூழல் அனுமதிக்கு லஞ்சம் பெற்றதாக அவர் மீது பிரதமர் மோடி புகார் கூறியிருந்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலின் பிரசாரத்தின்போது 'ஜெயந்தி வரி' திட்டங்கள் முடங்கியதாகவும் பிரதமர் விமர்சனம் செய்தார். இதையடுத்து, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும் சென்னை சவுகார்பேட்டை, திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள 19 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. போலி நிறுவனங்களின் பேரில் ரூ.421.58 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் புதிதாக தொடங்கிய நடப்பு கணக்கு மூலம் வெளிநாடுகளுக்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் ஹாங்காங்கில் உள்ள நிறுவனத்துக்கு இந்தியாவிலிருந்து ஆன்லைன் மூலம் பணம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.