மத்திய அரசின் எடுபிடியாகச் செயல்பட்டு வருகிறது எடப்பாடி அரசு!

‘’தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு, மத்தியரசின் எடுபிடி அரசாக செயல்பட்டு வருகிறது’’ என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அப்துல் சமது, ‘’கல்வித்தகுதி இருந்தும் நீட் தேர்வால் தன் மருத்துவர் கனவு சிதைந்து போனதை நினைத்து மனம் நொந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். இந்தியாவில் உள்ள மாநிலத்தில் தமிழகத்தில் மட்டும்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலம். இந்த நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவு கலையும் நிலையில் உள்ளது. 1950-ல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு நீதிமன்றத் தடைக்கு எதிராக தமிழக மக்கள்  நடத்திய மிகப்பெரும் போராட்டத்தால் முதல் சட்டதிருத்தைக் கொண்டுவந்து இந்திய மக்களுக்கு நிலைநாட்டிக் கொடுத்ததுபோல தற்போது நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களும் அனைத்து கட்சிகளும் நடத்தி வரும் போராட்டத்தால் நீட் தேர்வுக்கு முழு விலக்கு கிடைக்க வேண்டும்.

எடப்பாடி அரசை மத்தியரசு தனக்கு சாதகமாக்கிக்கொண்டு முழுமையாகக் கட்டுப்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க ஆழமாகக் காலூன்றப் பார்க்கிறது. எடப்பாடி அரசு மத்திய அரசின் எடுபிடி அரசாகவும் ஏவல் அரசாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தினகரனுக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி அணி பக்கம் இழுக்க அவர்கள் மீது வருமானவரி சோதனை என்ற மிரட்டல் ஆயுதத்தை மத்தியரசு தன் கையில் எடுத்து எம்.எல்.ஏ-க்களை அணி தாவ வைக்க முயற்சி செய்துவருகிறார்கள். எம்.எல்.ஏ-க்களும் பணபேரத்தால் அணி தாவி வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் சூழல் அகில இந்திய அளவில் மோசமான நிலையை வெளிக்காட்டி வருகிறது. இப்படியான ஒரு சூழலில் ஆளுநர் சட்டமன்றத்தில் எடப்பாடி அரசை இன்னமும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதில் தாமதமாக்கிக்கொண்டே வருகிறார். அனைத்துக்கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தியும் ஆளுநர் மெளனம் கடைப்பிடிப்பது ஏனோ தெரியவில்லை’’ என்றார்.     

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!