வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (09/09/2017)

கடைசி தொடர்பு:19:00 (09/09/2017)

பொன்.மாணிக்கவேலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது தமிழக அரசு!

ரயில்வே காவல்துறை ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.


சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்த பொன்.மாணிக்கவேல், ரயில்வே ஐ.ஜி-யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேலை நியமிக்கவும், வழக்குகளை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கவும் உத்தரவிட்டது. மேலும், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கும்பகோணத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவையே உறுதி செய்த உச்ச நீதிமன்றம், பொன்.மாணிக்கவேலுக்கு பாராட்டும் தெரிவித்தது.

இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல் தொடர்பான 19 வழக்குகளை விசாரிக்க பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற வழக்குகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரிப்பர் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி மகாதேவன், சிலை கடத்தல் தொடர்பாகப் பதியப்பட்டுள்ள 531 வழக்குகளையும் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், எந்த அடிப்படையில் 19 வழக்குகளை மட்டும் விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 
இந்தநிலையில், ரயில்வேத் துறை ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று உள்துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன் மர்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.