வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (09/09/2017)

கடைசி தொடர்பு:22:10 (09/09/2017)

வருத்தத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி!

வேலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமி வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது  மின் கசிவு ஏற்பட்டு எல்.இ.டி திரையின் பின்புறம் எரிந்தது. உடனே, தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீ அணைப்பான் மூலம் தீயை அணைத்தனர். இதனால் விழா மேடை முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. அதனையும் பொருட்படுத்தாமல், தனது ஆட்சியில் வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டே இருந்தார். 

வேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதற்கு, வணிகத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் மேடை அமைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேடை அமைக்கும் ஏற்பாடுகளை நேரில் இருந்தே பார்த்துக்கொண்டார்  அமைச்சர் கே.சி.வீரமணி . கடந்த ஒருவாரமாக வேலூரில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. மேடை அமைக்கும் கோட்டை மைதானத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் மேடை அமைக்கும் பணிகள் தாமதமானது. 

மழைநீரை வெளியேற்றி  மழைநீர் தேங்காமல் இருக்க மண்ணை கொட்டி சரி செய்து அதன் பின்பே அவசர அவசரமாக மேடை அமைக்க தொடங்கினர். இந்த அவசரத்தால் மேடையில் மின் இணைப்புகள் சரியான முறையில் தரவில்லை என தெரிகிறது. இதனால்தான் மின்கசிவு ஏற்பட்டு எல்.இ.டி திரை தீ பற்றியது. தனது மாவட்டத்திற்கு வரும் முதல்வரை பிரமிக்க வைத்து, குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்தார் வீரமணி. 

முதல்வர் பழனிச்சாமி, "விழா ஏற்பாடுகள் மிக அற்புதமாக செய்துள்ளார் வீரமணி. என்று புகழ்ந்து பேசினார்." அபொழுது அமைச்சர் வீரமணியின் முகத்தில் அப்படியொரு சிரிப்பு. முதல்வர் புகழ்ந்து தள்ளிய 5 வது நிமிடமே எல்.இ.டி திரையில் தீ பற்றியதால் வீரமணி முகத்தில் ஈயாடியது. இதனால் அமைச்சர் வீரமணி யாரிடமும் பேசாமல் தலைகுனிந்தவாரு அமைதியாக இருந்தார். 
விழாவில் இருந்து மக்கள் வெளியேறியதால், முதல்வர் பேச இருந்ததை முழுமையாக பேசாமல் பாதியிலேயே முடித்துக்கொண்டார். இது அமைச்சருக்கு மேலும் தலைகுனிவை ஏற்படுத்தியது. விழா முடிவில் முதல்வர், வீரமணியிடம் சரியாக பேசாமல் கிளம்பிவிட்டார். இவ்வளவு பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்தும் கடைசி நிமிடத்தில் இப்படியாகிவிட்டதே என்று அமைச்சர்  வருத்தத்தில் உள்ளார் என்கிறனர் அ.தி.மு.க-வினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க