Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''நீட் தேர்வு - பாதிப்பு இவர்களுக்குத்தான்!'' - ஆராய்ந்து சொல்கிறார் ரவீந்திரன் துரைசாமி

'இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டில், விடியலை உண்டாக்கும் சமூக நீதியின் வேருக்கே வெந்நீர் ஊற்றிவிட்டது நீட் தேர்வு' என்று தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் வெடித்துக் கிளம்புகின்றன. அரியலூர் அனிதாவின் மரணமும் அதையொட்டி எழுந்துள்ள மாணவர் போராட்டமும் எதிர்ப்பாளர்கள் தரப்பு நியாயத்தை உறுதிப்படுத்துகின்றன.

நீட் தேர்வு

'நீட் தேர்வினால், கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்; தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர்களின் மருத்துவப் படிப்புக் கனவுகள் கலைந்து போய்விடும்' எனத் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. இதுகுறித்து 'தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு' அமைப்பாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்...

ரவீந்திரன் துரைசாமி

''நீட் தேர்வினால், இட ஒதுக்கீடு பாதிப்புக்குள்ளாகிறது என்பது உண்மையல்ல. பொதுப்பட்டியலில்தான் பிரச்னை உள்ளது. அதிலும்கூட, பிற்படுத்தப்பட்டவர்களைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு முன்பு எத்தனை விழுக்காட்டினர் மருத்துவப் படிப்புக்குத் தேர்வானார்களோ அதே விகிதம்தான் இப்போது நீட் தேர்வு அமலுக்கு பிறகும் தொடர்கிறது. ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் இதற்கு முன்பு பொதுப்பட்டியலில் இருந்த விழுக்காட்டினை விடவும் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்படி நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக மேற்படிப்பை எட்டியவர்கள் அல்ல என்பதுதான். ஏற்கெனவே, இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாகப் படித்து பொருளாதாரத்தில் முன்னேறிய குடும்பங்களைச் சார்ந்த மாணவ மாணவியரே நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இந்த வாய்ப்பு கிராமப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்தம். 

நீட் தேர்வு 1

ஆக, இட ஒதுக்கீட்டில் எந்த மாறுபாடும் இல்லை. ஆனால், ஏற்கெனவே சாதி ரீதியிலான சலுகைகளைப் பெற்று மத்திய - மாநில அரசுப் பதவிகளில் பொறுப்பு வகித்துவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே மறுபடியும் சலுகையைப் பெறுகிறார்கள். இது எப்படியென்றால், ஒரே சாதிக்குள்ளேயே 'வலுத்தவனுக்கு மேலும் இடம் கிடைக்கிறது. இளைத்தவனுக்கு இருக்கிற இடமும் பறிபோகிறது' என்பதான ஒரு சூழல் நிலவுகிறது. உண்மையிலேயே சமூக நீதி காக்கப்பட வேண்டுமானால், அதே ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த, பொருளாதார ரீதியாக அடித்தட்டு நிலையில் இருக்கும் கிராமப்புற மக்கள்தான் பயனடையவேண்டும். ஆனால், இந்த வகையில், நீட் தேர்வு முறை சமூக நீதிக்கு எதிராகவே இருக்கிறது. இந்த வேறுபாடு குறித்து இங்கேயுள்ள தலைவர்களும் விவரமாக பேச மறுப்பதுதான் ஏன் என்று புரியவில்லை. 

அனைத்து சமுதாயத்திலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய கிராமப்புறங்களில் வசித்துவருபவர்களுக்கு நீட் தேர்வு முறை உண்மையிலேயே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், சாதி அடிப்படையில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஒரே சாதிக்குள்ளிருக்கும் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில்தான் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, இந்த அநீதியைக் களையவேண்டுமானால், அரசியல் கட்சிகள் இதுகுறித்த கருத்துருவாக்கத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும். இட ஒதுக்கீடு உண்மையிலேயே யாருக்குத் தேவைப்படுகிறதோ அவருக்குக் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். ஏனெனில், இப்போது உள்ள இந்த நீட் நடைமுறை என்பது 'பசி ஏப்பக்காரனின் சாப்பாட்டை புளி ஏப்பக்காரன் சாப்பிடுவதாகவே இருக்கிறது.' 
தற்போதைய சூழ்நிலையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் மற்றும் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்பது கடந்த காலத்தைவிடவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி நீட் தேர்வில் யாருக்கு அதிக தோல்வி என்றால், இதுவரை வெறுமனே மனப்பாடம் மட்டும் செய்து மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்டிருந்த மாணவர்கள்தான். அதனால்தான் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாக நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருந்த நாமக்கல் மாவட்டத்திலிருந்து மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் அமைந்துள்ளது. 

நீட் தேர்வு 2

அடுத்ததாக, நீட் தேர்வில், தமிழக நலன் பாதிப்புக்குள்ளாகிறது என்று எல்லோரும் சொல்லிவருகிறார்கள். இது உண்மைதான். அதாவது, மருத்துவப் படிப்புக்கான ஒதுக்கீட்டில் 15 விழுக்காடு சீட்களை நாம் மத்திய அரசுக்கு கொடுத்தாகவேண்டியுள்ளது. இது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் உண்மையிலேயே மிக அதிகமான அளவு. எனவே, இவ்விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு பெரும் இழப்புதான். இதையும் நாம் சரிக்கட்ட வழியிருக்கிறது. அதாவது, இதே நீட் நுழைவுத் தேர்வில் அதிகக் கவனம் செலுத்தி நமது மாணவர்கள் தகுதி, திறமைகளை வளர்த்துக்கொண்டால், நாம் மத்திய அரசுக்கு கொடுத்துவரும் 15 விழுக்காடு ஒதுக்கீட்டையும் தாண்டி நீட் தேர்வில் நமது மாணவர்கள் வெற்றி பெற  வாய்ப்பு ஏற்படும்.

மத்திய அரசுக்கு நாம் 15 விழுக்காட்டு இடங்களைத் தாரை வார்த்துக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்னை குறித்துப் பேசும்போது, 'தெற்கு வடக்கு' என்ற பாகுபாட்டோடு பேசுவது சரியல்ல... ஏனெனில், இவ்விஷயத்தில், நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற தென் மாநிலங்கள் நம்மோடு சேர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுக்காத சூழ்நிலையில், இப்பிரச்னையை மாநில அளவிலான பிரச்னையாக மட்டுமே பார்க்கவேண்டும்.''என்றார் விளக்கமாக!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close