"தமிழகத்தின் தன்னாட்சியை வலியுறுத்த வேண்டிய தருணம் இது!"- வலுக்கும் குரல் | Time to think about autonomy government in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (10/09/2017)

கடைசி தொடர்பு:19:59 (10/09/2017)

"தமிழகத்தின் தன்னாட்சியை வலியுறுத்த வேண்டிய தருணம் இது!"- வலுக்கும் குரல்

நீட் எதிர்ப்புக் கருத்தரங்கு

மிழகமே நீட் தேர்வு முறைக்கு எதிராக களமிறங்கி இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல புத்தகப் பைகளை சுமந்துகொண்டு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் நீட் தேர்வு முறையை எதிர்த்து பொங்கி எழுந்துள்ளனர்.  திருப்பூரில் தமிழ்நாடு கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் கல்வி உரிமைக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு அரசுப் பள்ளி ஆசிரியர்களும், தமிழறிஞர்களும் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

பாசிச திட்டம்

மொழி நிகர்மை உரிமைப் பரப்பியக்கத்தை சேர்ந்த ஆழி செந்தில் நாதன் பேசும்போது, " இனி வரும் காலங்களில் நமது உரிமைகள் எதையெல்லாம் நாம் இழக்கப் போகிறோம் என்பதற்கான சிறு  தொடக்கம்தான் இந்த நீட் தேர்வு. நீட் என்பது வெறும் கல்விக்கான பிரச்னை மட்டும் அல்ல. இனி எதிர்காலத்தில் மாநிலங்களுக்கான உரிமை என்று நாம் எதையுமே நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு பாசிச திட்டத்தை நம் மீது செலுத்தும் முயற்சியாகத்தான் பார்க்க வேண்டும். தமிழகம் மட்டும்தான் இந்த நீட்டை எதிர்த்து காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு இருப்பதாகப் பேசுகிறார்கள். எந்தவொரு பிரச்னைக்கும் முதலில் நாம் பேசிய பிறகுதான் மற்ற மாநிலத்தவர்கள் பேசுவார்கள் என்பது கடந்த கால வரலாறு.

நீட் தேர்வு முறையால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மாணவன்கூட, மருத்துவராக கனவு காண முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அனிதா மரணத்துக்குப் பிறகும் நம் மாநிலத்தில் சிலர் நீட் தேர்வை ஆதரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய கல்வித்தரம் சரியில்லை என்பது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது.இப்படி குற்றம்சாட்டுபவர்கள் இதே மாநில பாடத்திட்டத்தில் படித்துத்தான் மருத்துவர்கள் ஆகி இருக்கின்றனர். முன்பு தரமாக இருந்த கல்விமுறை  இன்றைக்கு தரமிழந்து போய்விட்டது என்று எதன் அடிப்படையில் சொல்கிறார்கள். .

பொதுப்பட்டியலால் உரிமை இழப்பு

இன்றுவரை நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திய யூனியன் என்று தான் இருக்கிறதே தவிர, இந்திய தேசம் என்ற ஒரு வார்த்தையே இல்லை.   மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை எமர்ஜென்சி காலத்தின்போது இந்திரா காந்தி பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்றதன் விளைவுதான் இன்றைக்கு நம்முடைய கல்வி உரிமையை நாம் இழந்துவிட்டுத்தவிக்கிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக நாம் போராடிக்கொண்டு இருப்பது. தமிழகத்துக்குத் தன்னாட்சி வேண்டும் என்பதை வலியுறுத்தும் மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். 

தமிழர்களின் வரலாற்றை மத்தியில் உள்ளவர்கள் சிதைக்க நினைக்கும்போது நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், தமிழர்களுக்கான எதிர்காலம் என்பது இல்லாமலேயே போய்விடும். நீட் தேர்வுமுறைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை நாம் அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும். நமது வேலை வாய்ப்புகளைப் பறிக்க நினைக்கும் இந்த சதி திட்டத்தை நாம் ஒன்றாக சேர்ந்து முறியடிக்க வேண்டும்" என்றார்.

பின்னர் பேசிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திர பாபு, "மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள அதிகாரப் பகிர்வை காப்பதற்கும், மாநில அரசின் அதிகார எல்லையை மத்திய அரசு பறித்துவிடக்கூடாது என்பதற்குமான போராட்டம் இது. இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகப்பு உரையில், இந்திய மக்களாகிய நாங்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, இந்திய குடிமக்கள் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்த விவாதத்தின்போது, இ ந்தியா ஒரு தேசமாக இன்னும் உருவாகிவிடவில்லை என்றும் அண்ணல் அம்பேத்கர் பதில் அளித்திருக்கிறார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

இந்தியக் கூட்டரசு எனக் குறிக்காமல் இந்திய ஒன்றிய அரசு என்று மட்டுமே குறிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம், எந்த மாநிலமும் பிரிந்துபோக முடியாது மற்றும் தனியாக அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேற்ற முடியாது என்பதைத் தவிர, சட்டம் இயற்றும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என்றும் அம்பேத்கர் மிகக் கவனமாகக் குறிப்பிட்டிருக்கிறார். பல்வேறு மொழி மற்றும் கலாசார வேற்றுமைகள் கொண்ட மக்களின் கூட்டமைப்புத்தான் இந்தியா. இங்கு ஒவ்வொருவரின் உரிமையும், அவரது வேறுபாடுகளும் அங்கீகரிக்கப்படும்போதுதான் ஒற்றுமை என்பதே சாத்தியமாகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு மொழிக்கும் சமமான கற்றல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமே தவிர ஏக இந்தியா, ஏக பாடத்திட்டம் என்பது நிச்சயம் சரியானதாகவே இருக்காது.

  ஒரு பன்னாட்டு நிறுவனம் சந்தையில் அதன் கம்பெனி சோப்பு கட்டிகளையே வேறு வேறு பெயர்களை வைத்து வியாபாரம் செய்து, எப்படி தனக்குப் போட்டியாளர்களே இல்லாமல் பார்த்துக்கொள்கிறதோ, அதேபோல இந்தியாவில் கல்வியைச் சந்தையாக்கி அதில் சி.பி.எஸ்.இ மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்க, நினைக்கின்றனர்..

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும், ஆறு மாத காலமாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் இருப்பதே தெரியாமல் இந்த மத்திய அரசு நடந்து கொள்வது என்ன நியாயம்? ஜி.எஸ்.டி வரி விதிப்பை அமல்படுத்த 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட இந்த அரசு. நீட் தேர்வை மட்டும் ஏன் இவ்வளவு அவசரகதியாக  மாணவர்கள்மீது திணித்தார்கள். மாநில அரசுகளுடன் பேசி விவாதிக்காமல், இப்படி அதிரடியாக மத்திய அரசு செயல்படுவது எந்த வகையில் நியாயம்.

கல்வி உரிமை

எய்ம்ஸ் சரவணன், ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா ஆகியோர்களின் மரணங்களை நாம் தனித்துப் பார்க்கக்கூடாது.
நீட் உட்பட நம் மாணவர்களின் கல்வி உரிமைமீது நடத்தப்படும் அடக்குமுறைகளை எதிர்த்து, மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close