வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (10/09/2017)

கடைசி தொடர்பு:20:00 (10/09/2017)

அமைச்சரின் பினாமி பெயரில் 246 கோடி ரூபாய் பணம் டெபாசிட்? - ஸ்டாலின் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் தமிழக அமைச்சர் ஒருவரின் பினாமி பெயரில் ரூ.246 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திருச்செங்கோட்டில் உள்ள வங்கி ஒன்றில் தமிழக அமைச்சர் ஒருவரின் பினாமி பெயரில் 246 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அந்த கருப்புப் பணத்தை 50 சதவிகிதம் அபராதம் செலுத்தி, வெள்ளையாக மாற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து ஊடகங்கள் கண்டுபிடித்து வெளியிட்டால் நாட்டுக்கு நல்லது என்று நான் நினைக்கிறேன்’ என்றார்.