Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாகராஜருக்குச் சிறப்பு வழிபாடு

பழைமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோவிலில் திரளான பெண்கள் ஆவணி கடைசி ஞயிற்றுக்கிழமையையொட்டி நாகர் சிலைகளுக்கு பால், மஞ்சள் பொடி, முட்டை, உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேக வழிபாடுகள் செய்தனர். புல் அறுக்கும் பெண் ஒருத்தி, மாட்டிற்குப்புல் அறுக்கும்போது, அவள் கையிலிருந்த அரிவாள் ஐந்து தலைநாகம் ஒன்றின் தலையில்பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்டு பயந்து நடுங்கிய அப்பெண், பக்கத்தில் உள்ள கிராம மக்களை அழைத்து வந்தாள். அவர்கள் கூட்டமாக வந்து பார்க்கும்போது, அந்த ஐந்து தலைநாகம் சிலையாகக் காணப்பட்டது. கிராமமக்கள், ஒரு சிறிய தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரைக்கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.

நாளடைவில் அக்கம் பக்கத்து கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, நாகராஜரை தரிசித்துச் சென்றதில், ஆலயம் மிகப் பிரபலமாயிற்று. தமிழகத்துக்கோவில்களில் வேறெங்கும் காணப்படாத தனிச்சிறப்பு, ஆலயத்தின் மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டதாகும். அக்கூரையில் எப்போதுமே ஒரு நாகப்பாம்பு காவல் புரிகிறது என்றும், வருடந்தோறும் கூரைவேயப்படும் போது ஒரு பாம்பு வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இக்கோயிலின் அர்ச்சகர்கள் கேரளாவிலுள்ள, ''பாம்பங்காட்டு நம்பூதிரி என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பரம்பரை பரம்பரையாகவே நாகத்தை வழிபடுபவர்கள். ஓலையாலான மூலஸ்தானத்தில் நாகராஜர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருப்பதும், அங்கிருந்து எடுக்கப்படும் மண்ணே இக்கோவிலின் முக்கிய பிரசாதமாகும். இம்மண் ஆறுமாதகாலம் கறுப்பு நிறமாக இருந்து வருகிறதாம். 

 

அருள்மிகு நாகராஜா கோவிலில் பல்வேறு காலங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வந்தாலும் மிக முக்கியமான வழிபாடாக ஆவணி மாதம் ஞயிற்றுக்கிழமைகளில் கோயில் வளாகத்தில் உள்ள  நாகர் சிலைகளுக்குப் பெண்கள் பூசாரிகள் இல்லாமலே நேரிடையாகவே பால், மஞ்சல் பொடி, முட்டை, உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்து வழிபாடுகள் செய்வது ஐதீகம். திருமணத் தடை தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இந்த வழிபாடுகள் ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் ஞயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி, குமரி மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் வருகை தந்து நாகர் சிலைகளுக்கு வேண்டுதல் வழிபாடுகளைச் செய்தனர். இதன் மூலம் வேண்டுதல்கள் நிறைவேறி வருவதாகப் பெண்களின் நம்பிக்கை. நாகதோஷங்களை ஒழிக்க இது ஒரு புண்ணியதலமாக விளங்குகிறது. பிள்ளைப்பேறு வேண்டுவோர் நாகச்சிலைகளால் சூழப்பட்ட இந்த அரச மரங்களைச்சுற்றி வலம் வந்தால் பலனடைவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close