'போராடிய மாணவர்களை சிறையிலடைப்பதா?': மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்! | Marxist communist party condemns imprisonment of students

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (11/09/2017)

கடைசி தொடர்பு:08:28 (11/09/2017)

'போராடிய மாணவர்களை சிறையிலடைப்பதா?': மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களையும், வாலிபர் சங்கத் தலைவர்களையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலைசெய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜி.ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட்

இது தொடர்பாக, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், " நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்களிப்பது, கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவது, மாணவி அனிதா மரணத்துக்கு நீதி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுவருகிறது. இதை சகித்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க அரசு,  மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க முனைகிறது. கோரிக்கைகளின் நியாயத்தை உணராத மத்திய பா.ஜ.க அரசு, தமிழக மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்க முனைகிறது. 

கடந்த சனிக்கிழமை (09.09.2017), சென்னை நுங்கம்பாக்கம், பெரம்பூர் பகுதிகளில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவர் - மாணவிகள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களிடம், சென்னை மாநகரக் காவல்துறை சட்டத்துக்குப் புறம்பாக மாணவர் - மாணவிகளைப் பள்ளியை விட்டு வெளியேற்றிவிடுவதாகவும், தேர்வு எழுத விடமாட்டோம் என்றும் மிரட்டி, அச்சுறுத்தி, அப்புறப்படுத்தியுள்ளனர். காவல்துறையின் கெடுபிடி, தள்ளுமுள்ளு தாக்கத்தால், சில மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர். மாணவிகளின் ஆடைகளைப் பிடித்திழுத்துத் தள்ளியுள்ளனர். 14 மாணவர்களையும் இந்திய மாணவர் சங்கத் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் இதர பகுதிகளிலும் மாணவர் - வாலிபர் சங்கத் தலைவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத அத்துமீறல் நடவடிக்கைகளை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, தமிழகத்தின் நலன் கருதியும், போராடும் மாணவர்களின் உணர்வுகளை மதித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு பெறுவதற்கும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கிடைத்திடவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டுமென மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

நீங்க எப்படி பீல் பண்றீங்க