வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (11/09/2017)

கடைசி தொடர்பு:15:56 (27/06/2018)

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள், தி.மு.க-வினர் அஞ்சலி

பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 60-ம் ஆண்டு நினைவு தின குருபூஜை இன்று காலை தொடங்கியது. அ.தி.மு.க சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1956 -ம் ஆண்டு முதுகுளத்தூரில்  நடந்த சாதி கலவரத்தை தொடர்ந்து நடந்த சமாதான கூட்டத்தில் பங்கேற்ற  இவர் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ல்  விரட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பரமக்குடியில் ஆண்டு தோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் அஞ்சலி

இம்மானுவேல் சேகரனின் 60-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இம்மானுவேல் சேகரனின் சொந்த கிராமமான செல்லூரைச் சேர்ந்தவர்களும்,இமானுவேல் சேகரனின் குடும்பத்தினரும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி முதல் மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் தமிழக அமைச்சர்கள் சரோஜா, ராஜலெட்சுமி, மணிகண்டன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா இம்மானுவேல் சேகரனின் குடும்பத்தினரும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி முதல் மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் தமிழக அமைச்சர்கள் சரோஜா, ராஜலெட்சுமி, மணிகண்டன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோருடன் ஏராளமான அ.தி.மு.க தொண்டர்களும் இம்மானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
 

இதனைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தமிழரசி, சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் திசைவீரன், முருகவேல், மாவட்டச் செயலாளர் திவாகரன் உள்ளிட்ட தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சதன் திருமலைக் குமார், புதூர் பூமிநாதன், மாவட்டச் செயலாளர் குணா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க-வினர் அஞ்சலி
 

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியச் சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மாற்றுப் பாதைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் இம்மானுவேல் நினைவிடம் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகள், பதட்டமான கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஆள் இல்லா விமான கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.