வெளியிடப்பட்ட நேரம்: 11:14 (11/09/2017)

கடைசி தொடர்பு:11:35 (11/09/2017)

பொதுச் செயலாளர் என்பவரே இல்லை! ஜெயக்குமார் அதிரடி

'அ.தி.மு.க-வில், பொதுச் செயலாளர் என்று ஒருவர் இல்லை' என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாகக் கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதாக கட்சியின் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, சசிகலாவை முதல்வராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், பன்னீர்செல்வம் திடீரென சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதோடு, சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து, அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டது. இந்தச் சூழ்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும், இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரனும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பதாக முதல்வர் பழனிசாமி அணியினர் அதிரடியாக அறிவித்தனர். இதையடுத்து பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவித்தனர். தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், ஆவேசமடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் தலைவர் ஆளுநரை சந்தித்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தப் பரபரப்புக்கு மத்தியில், பழனிசாமி அணியின் சார்பில் சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்குழு கூட்டத்தைப் பொதுச்செயலாளர் மட்டுமே கூட்ட முடியும் என்றும் பழனிசாமி அணியினர் கூட்டும் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வெற்றிவேல் எம்.எல்.ஏ வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வெற்றிவேலின் மனுவைத் தள்ளுபடிசெய்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'அ.தி.மு.க-வில், பொதுச்செயலாளர் என்று ஒருவர் இல்லை என்றும், நாளை திட்டமிட்டபடி பொதுக்குழு என்றும்,  சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்படுகிறது என்றும் அதிரடியாகக் கூறியுள்ளார்.

இதனிடையே, பழனிசாமி அரசு  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.