வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (11/09/2017)

கடைசி தொடர்பு:13:16 (11/09/2017)

“ஓவியம் பாராட்டை மட்டுமல்ல 20,000 ரூபாய் மாத வருமானத்தையும் தருது!” சுயதொழிலில் சாதிக்கும் கனிமொழி

கனிமொழி

சென்னை, வடபழனியில் பெயின்ட்டிங் பயிற்சி அளிக்கும் கனிமொழியின் மாத வருமானம் 20,000 ரூபாய்க்கும் மேல். தன்னிடம் பெயின்ட்டிங் கற்கும் பெண்கள், அதை ஒரு தொழிலாக முன்னெடுத்துச் செல்வதற்கு தூண்டுகோலாக இருப்பதையே பெருமையாக நினைக்கிறார் கனிமொழி. அதுதான் அவரை மற்ற பயிற்சியாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி, பலரும் அறிந்த மனுஷியாக மாற்றியிருக்கிறது. அவரது வெற்றிப்படிகளுக்கான விதையாக இருந்த விஷயத்தைப் பகிர்கிறார்... 

“பிறந்து வளர்ந்தது மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் கிராமம். என் அப்பா, அரசுப் பள்ளியில் அப்பா ஹெட்மாஸ்டர். எனக்கு இரண்டு தங்கைகள். இப்பவும் பெண் பிள்ளைகளை கரையேத்தணுமே என்கிற பதற்றம் ஒவ்வொரு பெற்றோரிடமும் இருக்கு. எங்க வீட்டிலும் அப்படித்தான். ரிட்டயர்டு ஆகறதுக்குள்ள மூணு பொண்ணுங்களையும் கரையேத்திடணும் என்கிற நோக்கத்திலேயே இருந்தாங்க. அதில் அடங்கிப்போச்சு என் படிப்பு கனவு. ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு, காலேஜ்ல படிக்க எவ்வளவோ போராடி கேட்டும் ஒண்ணும் நடக்கலை. பெற்றோரின் பிடிவாதம்தான் ஜெயிச்சது. கல்யாணமாகி சென்னைக்கு வந்தேன். கணவருக்குப் பணிவிடை, குழந்தைகள் வளப்பு என வாழ்க்கைச் சக்கரத்தில் சுழ ஆரம்பிச்சேன். 'இப்படியே போயிட்டிருந்தா எனக்கான அடையாளம் என்ன இருக்கும்?'னு அடிக்கடித் தோணும். பல மதிய நேரங்கள் இப்படித்தான் கழியும். பிறகு, எனக்குப் பிடிச்ச டிராயிங் விஷயத்தைக் கையில் எடுத்தேன். இயல்பிலேயே கற்பனைத் திறனும் கை வேலைப்பாடுகள் மீதான ஆர்வமும் இருந்துச்சு. பிளெய்ன் சேலைகளுக்கு டிசைன் வரைய ஆரம்பிச்சேன்'' என்கிற கனிமொழிக்கு, 'செகண்ட் ஹாஃப்' சமயத்தில்தான் வாழ்க்கை கிக் ஸ்டார்ட் எடுத்திருக்கிறது. 

கனிமொழி

“பத்து வருஷத்துக்கு முன்னாடி, 'ஹேண்ட்கிராஃப்ட்' டெபுடி டைரக்டர் ராமமூர்த்தியின் நிகழ்ச்சியைப் பொதிகை டி.வி-யில் பார்த்தேன். பெயின்ட்டிங்கை முறையாகக் கற்கும் எண்ணம் உருவாக, மறுநாளே அவருக்கு போன் பண்ணினேன். ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பயிற்சி எடுத்துக்க சொன்னார். அதை முடிச்சபோது எனக்குள் பெரிய தன்னம்பிக்கை வந்துச்சு. இந்தத் துறையில் ஜெயிக்கும் உத்வேகம் பிறந்துச்சு. ஆசை தீர வரைஞ்சேன். 'ஏன் நாமே பெயின்ட்டிங் கிளாஸ் எடுக்கக் கூடாது?'னு தோணுச்சு. அக்கம்பக்கத்து குழந்தைகள், பெண்கள் எனத் தெரிஞ்சவங்களுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிச்சேன். நாளாக நாளாக, வகுப்பில் சேர்றவங்களின் எண்ணிக்கை அதிகமாச்சு. பாட் பெயின்ட்டிங், டைசிஸ் (daisies) பெயின்ட்டிங், மதுபானி, காபி பெயின்ட்டிங், அப்ஸ்ட்ராக்ட் அண்டு ஆயில் பெயின்ட்டிங், நிப் பெயின்ட்டிங், ஒன் ஸ்ட்ரோக் பெயின்ட்டிங், பேஸிக் அண்டு அட்வான்ஸ்டு பெயின்ட்டிங், டிரை பேஸ்டல் பெயின்ட்டிங் என எதையும் விடலை. ராஜஸ்தான், ஒடிசானு ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பா இருக்கிற பெயின்ட்டிங் வகைகளை கத்துக்கிட்டு, கிளாஸ் எடுத்தேன். இப்போ, டிராயிங் கிளாஸ் வகையைப் பொருத்து ஒரு நபருக்கு மாசம் ஆயிரம் ரூபாய்க்கும் மேல ஃபீஸ் வாங்கறேன். அடிக்கடி என் பெயின்ட்டிங்ஸை கண்காட்சி வெச்சு விற்பனையும் செய்றேன். மாசம் 20,000 ரூபாய்க்கும் மேலே சம்பாதிக்கிறேன்'' என்று உற்சாகமாகச் சொல்கிறார் கனிமொழி. 

ஃபிளவர் மேக்கிங், ராஜஸ்தான் மிரர் வொர்க், மெட்டல் எம்போஸிங், கிளாஸ் ஃப்யூஸிங் வொர்க், எம்ப்ராய்டரி மற்றும் யோகா என்று பல ஏரியாக்களிலும் மிளிரும் கனிமொழி, அவற்றுக்கான வகுப்புகளையும் எடுக்கிறார். 

“இந்தப் பத்து வருஷத்தில் ஐநூறு பேருக்கு மேல் வகுப்புகள் எடுத்திருப்பேன். ஓவிய ஆர்வத்துடன் வர்றவங்களுக்கு இதை ஒரு தொழிலாக, பொருளாதாரத்துக்கான பிடிப்பாக எப்படிச் செய்யலாம்னு கத்துக்கொடுக்கிறது பெரிய சந்தோஷமா இருக்கு. இங்கே கத்துக்கிட்டு, பிஸினஸா பண்றவங்க நிறைய இருக்காங்க. இது, பல பெண்களின் தன்னம்பிக்கைத் திரி, என்னால் தூண்டப்படுதுனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. ஸ்கூல் படிச்சுட்டிருந்தப்போ என் கற்பனையை எல்லாம் வாசல் கோலமா விரிப்பேன். அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க நின்னு ரசிச்சு, பாராட்டுவாங்க. அதைக் கேட்கும் என் அம்மா, 'இந்த கோலம்தான் உன் வாழ்க்கையை முன்னேற்றும் புள்ளிகளா இருக்கும்னு நினைக்கிறேன்’னு சொல்வாங்க. அந்த ஆசீர்வாதம் இன்னிக்கு உண்மை ஆகிருக்கு. வீடு, சமையல், குழந்தைகள்ன்னே வாழ்க்கை அடைப்பட்டிருக்கேன்னு சோர்ந்துடாதீங்க. ஒரு கதவு அடைக்கப்பட்டிருந்தால், மறுகதவைத் தட்டுங்க. நிச்சயம் நமக்கான வாசல் கிடைக்கும்'' என்று பூரிப்போடு, பெண்களுக்கான தன்னம்பிக்கை விதை கொடுக்கிறார் கனிமொழி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்