முதல்வருக்கு உளவுத்துறையின் ரெட் சிக்னல்?! - பொதுக்குழு உதறலில் அமைச்சர்கள் #VikatanExclusive | Ministers worry about ADMK general body meeting

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (11/09/2017)

கடைசி தொடர்பு:13:11 (11/09/2017)

முதல்வருக்கு உளவுத்துறையின் ரெட் சிக்னல்?! - பொதுக்குழு உதறலில் அமைச்சர்கள் #VikatanExclusive

அ.தி.மு.க. இணைப்புக்கூட்டம்

அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள தினகரன் ஆதரவாளர்கள்குறித்த பட்டியலை தமிழக உளவுத்துறை, முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு உஷாராகியதுடன், தினகரன் ஆதரவாளர்களைப் பொதுக்குழுவில் சிறப்பாகக் கவனிக்கவும் முடிவுசெய்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நாளை நடக்கிறது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிரமாகச் செய்துவருகின்றனர். வழக்கமாக, அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும் ஶ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தையே இந்த முறையும் முன்பதிவுசெய்துள்ளனர். ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர், அமைச்சர்கள் பெஞ்சமின், மாஃபா.பாண்டியராஜன் ஆகியோர் முன்னின்று கவனித்துவருகின்றனர்.

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து, தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக்கூறி, வெற்றிவேல் எம்.எல்.ஏ-வுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதனால் தினகரன் ஆதரவாளர்கள் அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை நடைபெற உள்ள பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு வரும் உறுப்பினர்களுக்கு வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நிலையில், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கூட்டத்தில் பங்கேற்பவர்களை ஏ.சி பஸ் மூலம் சென்னைக்கு அழைத்துவரும்படி சொல்லப்பட்டுள்ளது. தனியாக காரில் யாரும் வர அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் அனைவரும் சென்னைக்கு வந்து சேர உள்ளனர். அவர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு, அனைத்து வசதிகளும் தயார்நிலையில் இருப்பதாக அ.தி.மு.க. உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

இந்தச் சூழ்நிலையில், தினகரன் ஆதரவாளர்களால் பொதுக்குழுவில் களேபரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைமூலம் முதல்வர் அலுவலகத்துக்கு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுக்குழு நடக்கும் மண்டபத்தில் வழக்கத்தைவிட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அழைப்பிதழ் மற்றும் உறுப்பினர் அட்டை இல்லாதவர்களை மண்டபத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை. மேலும், சிறப்பு விருந்தினர்களாகவும் யாரும் அழைக்கப்படவில்லை.

கூட்டத்தில், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி, தினகரனுக்கு எதிரான நடவடிக்கை, கட்சியை வழிநடத்த குழு அமைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. சசிகலா, தினகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்போது, பிரச்னைகளை ஏற்படுத்துவோர்களைக் கவனித்த ஸ்பெஷல் பௌன்ஸர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் தொடர்ந்து நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையில், 9 எம்.எல்.ஏ-க்கள் அணி மாற முடிவுசெய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள், மைசூரிலிருந்து சென்னைக்கு புறப்பட உள்ளனர். அவர்களும் பொதுக்குழுவில் பங்கேற்பார்கள் என்று முதல்வர் தரப்பு நம்புகிறது. பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடைவிதிக்க முடியாது என்று தெரிவித்ததும், அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பொதுக்குழுவில் பங்கேற்று, தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பதைத் தவிர வேறுவழியில்லை என்று தினகரனிடம் தெரிவித்துள்ளனர். அப்படிச் செய்தால், அந்தப் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும். எனவே, பொதுக்குழுவை நம்முடைய ஸ்லீப்பர் செல்கள் மூலம் முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தீவிர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

தினகரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்கள், "அ.தி.மு.க விதிப்படி பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம், பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்ட சசிகலா அனுமதியில்லாமல் இந்தப் பொதுக்குழு நடக்கிறது. இதனால்,  இந்தப் பொதுக்குழுவும், அதில் எடுக்கப்படும் தீர்மானமும் செல்லாது. இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளோம். மேலும், சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க ஆலோசித்துவருகிறோம். சசிகலாவுக்கு எதிராக அவ்வளவு சுலபமாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. பொதுக்குழுவில் எங்களது ஸிலீப்பர் செல்லாகச் செயல்படுபவர்கள் வெளியில் வருவார்கள். ஒருவேளை சசிகலா, தினகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், தமிழக அமைச்சர்களின் மறுபக்கங்கள் சி.டி-யாக வெளியிடப்படும்''.என்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசியவர்கள், ''பொதுக்குழுவில் நிச்சயமாக சசிகலாவின் பதவி பறிக்கப்படும். சசிகலா குடும்பத்தினருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும். பொதுக்குழுவில் எங்களுக்கு முழு பலம் உள்ளது. தினகரன் ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் பங்கேற்றாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றில் பங்கேற்பவர்கள், சில விதிமுறைகளைப் பின்பற்ற இந்த முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட இந்த முறை பொதுக்குழு உறுப்பினர்கள், 2300 பேரின் பெயர், புகைப்படம் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுபோல, 750 செயற்குழு உறுப்பினர்களின் விவரமும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தங்களுடையை பெயர், புகைப்படத்தில் உள்ள பட்டியலில் உறுப்பினர்கள் கட்டாயம் கையெழுத்திட வேண்டும். மேலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் அமர வேண்டும். பொதுக்குழு, செயற்குழு கூட்ட நிகழ்ச்சிகள் முழுவதும் வீடியோ எடுக்கப்படும். ஏற்கெனவே, தினகரன் ஆதரவாளர்கள் என்று கருதப்படுபவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களால் நிச்சயம் பொதுக்குழுவில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. மைசூரிலிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பொதுக்குழுவில் பங்கேற்பதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. இந்தப் பொதுக்குழுவுக்குப் பிறகு, சசிகலா குடும்பத்துக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்காது. ஜெயலலிதா விரும்பிய ஆட்சி, தமிழகத்தில் தொடரும். சசிகலா குடும்பத்தினரால் அ.தி.மு.க-வுக்கு பிரச்னை ஏற்பட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவுசெய்துவிட்டார். அது தொடர்பாக காவல்துறை டி.ஜி.பி.யுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் முதல்வர்'' என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்