காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்! | People agitate near collector office for drinking water

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (11/09/2017)

கடைசி தொடர்பு:14:40 (11/09/2017)

காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

குடிநீர் கோரி முற்றுகை

சீரான குடிநீர் விநியோகத்தை வலியுறுத்தி நெல்லையில் பெண்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, அரியப்பபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் கீழ் சிவசைலனூர் என்ற குக்கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் நிலத்தடி நீர் சரிவர இல்லாத நிலையில் தாமிரபரணி குடிநீர்த் திட்டத்தை நம்பியே பொதுமக்கள் இருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரையிலும் சீரான குடிநீர் விநியோகம் இருந்து வந்ததால் பொதுமக்கள் தண்ணீர் தேவைக்காக சிரமப்படாமல் இருந்தனர். அதன் பின்னர், குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. நிலத்தடி நீரும் கிடைக்காததால் அந்தப் பகுதி மக்கள் குடிநீருக்காகப் பல கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் இதுவரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. ஒரே ஊராட்சியில் ஒரு பகுதி மக்களுக்குத் தண்ணீர் கிடைக்கும் நிலையில் மற்றொரு பகுதி மட்டும் புறக்கணிக்கப்படுவதால் அதிருப்தி அடைந்தனர். அதனால் சிவசைலனூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது பேசிய பெண்கள், ‘’எங்கள் ஊராட்சியான அரியப்பபுரத்தில் குடிநீர் விநியோகம் தடையில்லாமல் நடக்கிறது. ஆனால், எங்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், எங்களுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும். அல்லது எங்களை அரியப்பபுரம் ஊராட்சியிலிருந்து நீக்கி அருகில் இருக்கும் ஆவுடையானூர் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும்’’ என ஆவேசத்துடன் தெரிவித்தனர்.