வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (11/09/2017)

கடைசி தொடர்பு:14:27 (11/09/2017)

‘நீங்க உடனே கலெக்டர் ஆபீஸுக்கு வர முடியுமா?’ - விகடன் செய்தியால் வந்த ஆதார் அழைப்பு

மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புழுதிப்பட்டி கிராமம். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள அந்த ஊரில் இறங்கி `ஜாகீர் உசேன் கோழிக்கடை' எனக் கேட்டால் எல்லோருக்கும் தெரிகிறது. ஊரார் சொல்லும் அடையாளம் `சத்திரம் ஏரியாவில் ராயல் கோழிக்கடை'. இந்த அடையாளத்தை வைத்து ஜாகீர் உசேன் கோழிக்கடைக்குச் செல்லலாம். அங்கே போனால் ரத்தக்கறை படிந்த சட்டையை அணிந்திருப்பார் ஜாகீர் உசேன். வாடிக்கையாளர்கள் `ஜாகீர் அண்ணே, ஒரு கிலோ கறி வேணும். நல்ல பீஸா போட்டுக் கொடுங்க'' என்றவுடன் உற்சாகத் துள்ளலுடன் எழும் ஜாகீர் உசேனின் விழித்திரைக்கு ஆண்டவன் திரைபோட்டாலும், தன்னம்பிக்கையோடு கோழியை அறுத்து வாடிக்கையாளர் கேட்ட அளவில் துல்லியமாக எடை நிறுத்தி கொடுப்பதில் கைதேர்ந்தவர்.

ஜாகீர் உசேன்

அதாவது, அரைக்கிலோ ஒரு கிலோ படிக்கற்களைத் தடவிப் பார்க்கிறார். அதன் பிறகு அவர் கையில் இருக்கும் தராசு முள்ளை வைத்து எடையைக் கணிக்கிறார். வாடிக்கையாளர்கள் கேட்ட அளவில் கறியை கவரில் போடும் வரை அவரே அனைத்து வேலைகளையும் செய்கிறார். பணம் வாங்கும்போது 10, 20, 50, 100, 500, 2000 ரூபாய் தாள்களை தெளிவாகக் கண்டுபிடிக்கும் வல்லமை படைத்தவர் இவர். அதேபோல் சரியான சில்லறையும் கொடுக்கிறார். இதையெல்லாம் ரூபாய் தாள்களின் அளவைவைத்தே கணக்கிடுகிறார் ஜாகீர் உசேன்!ஆதார் அட்டையுடன் ஜாகீர் உசேன்

சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள காமன்கோட்டை கிராமம். இவருக்கு பிறவிலேயே இரண்டு கண்களும் பறிபோனது. மதுரை அரவிந்த் மருத்துவமனையில் இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள். காமன்கோட்டையில் இருக்கும் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்த ஜாகீர் உசேன், தேர்வு எழுதும்போது தலைமையசிரியர் வந்து “நீ பரீட்சை எழுதக் கூடாது'' என்று சொல்லியிருக்கிறார். ``சார், நான் ஜன்னல் ஓரத்துல வெளிச்சத்துல உட்காந்தால் எழுதிருவேன்''னு கெஞ்சியவரை வெளியே அனுப்பிவிட்டார் தலைமை ஆசிரியர். 

`கண்ணு தெரியாதவன் படிச்சு பாழாய்ப்போறதைவிட, ஆடு மேய்ச்சாவது ஆளாகிக்கிறேன்' என்று ஊரைவிட்டு வெளியே வந்தவர், நண்பர் ஒருவர் மூலமாக துவரங்குறிச்சி வந்தார். நம்பி வந்த நண்பரும் இவரை கைவிட, பையில் வைத்திருந்த பணத்தை வைத்து சிறிய அளவில் கோழிப்பண்ணை தொடங்கியவருக்கு, அந்தத் தொழிலும் கைகொடுக்கவில்லை. விழித்திறனற்றவர் என்பதால், துவரங்குறிச்சியில் கோழிக்கடை அமைக்க எவரும் உதவவில்லை. மனிதாபிமானம் உள்ள ஒருவர் மூலம் ஒரு கடையைப் பிடித்து, கோழிக்கறி விற்பனை செய்து, தன் வாழ்க்கையை நடத்திவருகிறார்.

இவருக்கு  இரண்டு பிள்ளைகள். தனக்குக்  கிடைக்காத கல்வி, தன் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை.

ஜாகீர் உசேன், விகடனுக்கு நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் நன்றி சொல்லிவிட்டு, பேச ஆரம்பித்தார். 

“கடந்த நான்கு வருஷங்களா ஆதார் அட்டைக்காக அலைஞ்சுக்கிட்டிருந்தேன். இதனாலேயே  காஸ் மானியம் நின்னுபோச்சு; என்னோட பேங்க் அக்கவுன்ட்டும் போச்சு; நான் வாங்கிட்டிருந்த  உதவித்தொகையும் பறிபோகிற நிலைமையில் இருந்த எனக்கு, ஆதார் அட்டை கிடைச்சது விகடனாலதான்.

பல முறை ஆதாருக்கு விண்ணப்பித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது ‘ஆனா, அரசாங்கம் ஒரு பக்கம் ஆதார் ஆதார்னு சொல்லுது. நான் என்னதான் பண்றது?'னு மனசு நொந்துபோயிருந்தேன்.

12.07.2017 அன்று, எனக்கு மகிழ்ச்சியான நாள். காரணம், விகடன் என் கஷ்டத்தைத் தெளிவா இணையத்துல செய்தியா வெளியிட்டது. இந்நிலையில், அடுத்த நாள் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. ‘நீங்க உடனே கலெக்டர் ஆபீஸுக்கு வர முடியுமா?'னு கேட்டாங்க. ‘நாளைக்கு வர்றேன்'னு சொன்னேன். அதே மாதிரி கலெக்டர் ஆபீஸுக்குப் போனேன். அப்பதான் எனக்கும் ஆதார் அட்டை வந்துரும்னு நம்பிக்கையே வந்தது. இதுக்கெல்லாம் காரணம் விகடன்தான்'னு மனசுக்குள்ளேயே நினைச்சுக்கிட்டேன். அதே மாதிரி ஆதார் அட்டையும் வந்துடுச்சு” என்ற ஜாகீர் உசேன், “விகடனுக்கு நன்றி” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்