வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (11/09/2017)

கடைசி தொடர்பு:16:45 (11/09/2017)

'கல்லாகட்டும் அதிகாரிகள்' - தஞ்சை மாநகராட்சி தில்லுமுல்லு

அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் செய்யும் முறைகேடுகளால், தஞ்சை மாநகராட்சி ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது. இதனால், தஞ்சை மாநகரம் மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடியாமல் திணறிவருகிறது.  தற்போது தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க முடியாத கையறு நிலைக்கு தஞ்சை மாநகராட்சி தள்ளப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க முடியாத சூழலும் உருவாகியுள்ளது.  

தஞ்சை

தனது பெயரை வெளியிட விரும்பாத நேர்மையான அலுவலர் ஒருவர் இங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பான சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “தஞ்சை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 100-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் குப்பைகளை அள்ள பெரிய திருமண மண்டபமாக இருந்தால் 1,000 ரூபாயும் சிறிய மண்டபமாக இருந்தால் 600 ரூபாயும் மாநகராட்சி அதிகாரிகள் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், இந்தப் பணம் முழுமையாக மாநகராட்சிக்கு வந்து சேர்வதில்லை. 100-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில், ஆண்டுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசேஷங்கள் நடைபெறுகின்றன. குப்பைகளை அள்ள மாநகராட்சி வாகனம் மற்றும் ஊழியர்களைப் பயன்படுத்திதான் குப்பைகள் அள்ளப்படுகின்றன. ஹோட்டல்களிலும் இதே நடைமுறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இதற்காக வசூலிக்கப்படும் பல கோடி ரூபாய் மறைமுகமாக சுருட்டப்படுகிறது. இதுமட்டுமல்ல, திருமண மண்டபங்களிடமிருந்து ஆண்டுக்கு ஒருமுறை அதன் இட அளவைப் பொறுத்து உரிமக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இது நேர்மையாக நடைபெறுவதில்லை. கமிஷன் வாங்கிக்கொண்டு மிகவும் சொற்பமான தொகைதான் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. 15,000 ரூபாய்க்கு மேல் உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டிய மிகப் பெரிய ஆடம்பர திருமண மண்டபத்திடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதுபோல இன்னும் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகின்றன” என்றார். 

இதுதான் இந்தியாவை வளமான பாதையில் அழைத்துச்செல்லும் வியூகமா?!