'நீட்'டை அனுமதித்தால் தமிழக பாடத் திட்டங்களைக் காவி மயமாக்கிவிடுவார்கள்! திருமாவளவன் எச்சரிக்கை

'தமிழகத்தில், ஒடுக்கப்பட்டவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் குடிசைகள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. அந்த அளவுக்குத் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது' எனத் திருமாவளவன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்துவரும் தியாகி இமானுவேல் சேகரனின் 60-ம் ஆண்டு நினைவு தினத்தில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  திருமாவளவன், ''சாதியத்துக்கு எதிராகப் போராடி மடிந்த தியாகி இமானுவேல் சேகரனுக்கு அரசு விழா எடுக்கக் கோரி, கடந்த 10 ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவருகிறோம்.

தமிழகத்தில் சாதியின் பெயரால் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது.ஒடுக்கப்பட்டவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் குடிசைகள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இவற்றைத் தடுப்பதற்காக  2015-ம் ஆண்டு வன்கொடுமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும். தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இது முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. இந்நிலையில், ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் வேண்டும் எனத் தொடர்ந்து கேட்டுவருகிறோம்.

திருமாவளவன்

நீட் தேர்வு என்ற பெயரால் மத்திய -மாநில அரசுகள் திட்டமிட்டு சேர்ந்து நடத்திய நாடகத்தின் விளைவாக, அனிதா என்ற ஏழை மாணவியின் உயிர் பறிபோயிருக்கிறது. இது, அனிதா என்ற ஓர் உயிருக்கு மட்டும் பாதிப்பல்ல. ஒட்டு மொத்த ஏழைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். நீட் தேர்வை அனுமதித்தால், தமிழகப் பாடத்திட்டங்களைக் காவி மயமாக்கிவிடுவார்கள். நாடு முழுவதும் இதை எதிர்த்து நாம் போராட வேண்டும். அதன் ஒரு பகுதியாக, வரும் 21-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடக்கிறது'' என்றார்.

முன்னதாக, அ.தி.மு.க அம்மா அணியின் சார்பில், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தினகரனுடன்  முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், மேலூர் சாமி, மாவட்டச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!