வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (11/09/2017)

கடைசி தொடர்பு:14:10 (11/09/2017)

’கொறடா ராஜேந்திரனை நீக்குங்கள்’ - சபாநாயகரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ.

அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரனைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, சபாநாயகர் தனபாலிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் மனு அளித்துள்ளார். 

வெற்றிவேல் எம்.எல்.ஏ.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவரும் 19 எம்.எல்.ஏ-க்கள், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து மனு அளித்தனர். ஆளுநரைச் சந்தித்து மனு அளித்த எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரை ஒன்றை சபாநாயகருக்கு அளித்தார். அதன் அடிப்படையில், இந்த விவகாரம்குறித்து விளக்கம் அளிக்குமாறு 19 எம்.எல்.ஏ-க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆளுநரைச் சந்தித்ததுகுறித்து கேள்வி எழுப்பும் அதிகாரம் கொறடாவுக்கு இல்லை என்று தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் தொடக்கம் முதலே கூறிவந்தனர். 

இந்த நிலையில், கொறடா ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவும் அவரை நீக்கவும் கோரி, சபாநாயகர் தனபாலைச் சந்தித்து வெற்றிவேல் எம்.எல்.ஏ மனு அளித்துள்ளார். ’ஆளுநரைச் சந்தித்தது தொடர்பாகத் தங்களிடம் விளக்கம் கேட்காமல், நேரடியாக நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்குப் பரிந்துரைசெய்ய கொறடாவுக்கு அதிகாரமில்லை. எனவே, அதிகார துஷ்பிரயோகம் செய்த கொறடாவை நீக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.