கிரானைட் கொள்ளையர்களைப் பாதுகாக்கத் துடிப்பது ஏன்? பழனிசாமி அரசை விமர்சிக்கும் அன்புமணி

மேலூர் வட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளைகுறித்து சி.பி.ஐ விசாரணை தொடங்காத நிலையில், சகாயம் குழுவைக் கலைப்பது முறையல்ல என்று கூறியுள்ள பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி,  'கிரானைட் கொள்ளையர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களைப் பாதுகாக்க ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டை உலுக்கிய கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு அளவுக்கு அதிகமாக தாமதம் செய்வது, பல்வேறு ஐயங்களை  ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தைச் சூறையாடிய கிரானைட் கொள்ளையர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களைப் பாதுகாக்க ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நடைபெற்ற கிரானைட் கொள்ளைகளை வெளிக்கொண்டு வந்ததில் பா.ம.க-வுக்கு பெரும் பங்கு உண்டு. கிரானைட் கொள்ளைகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் அரசுக்கு அறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து, கிரானைட் கொள்ளைகுறித்து சகாயம் தலைமையில் குழு அமைத்து, விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. தான் தொடர்ந்து வலியுறுத்திவந்தது.

உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்காமல், தமிழக அரசு தாமதப்படுத்தியபோதும் அதை எதிர்த்து பா.ம.க. போராடியது. நீண்ட தாமதத்துக்குப் பிறகு விசாரணையை தொடங்கிய சகாயம் குழு, சுமார் ஓராண்டு விசாரணைக்குப் பிறகு, அதன் விசாரணை அறிக்கையை 23.11.2015 சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது.

மதுரை மாவட்டத்தில் மட்டும் தனியார் நிறுவனங்களின் கிரானைட் கொள்ளையால் ரூ.62,890.91 கோடி, அரசுக்குச் சொந்தமான டாமின் நிறுவனத்தின் முறைகேடுகளால் ரூ.5507.53 கோடி, தனியார் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படவேண்டிய அபராதம் ரூ.34,304.13 கோடி, டாமின் நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படவேண்டிய அபராதம் ரூ.9978.99 கோடி என மொத்தம் ரூ.1,12,681.56 கோடி  வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சகாயம் குழு மதிப்பிட்டிருக்கிறது. அதேநேரத்தில், இது உத்தேச மதிப்பீடுதான்; துல்லியமான மதிப்பீடு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால், அதுகுறித்து சி.பி.ஐ-யின் பல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தும்படி சகாயம் குழு பரிந்துரைத்தது.

சகாயம் குழுவின் அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதன்மீது தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சகாயம் குழு அறிக்கை மீது எத்தகைய விசாரணையை அரசு நடத்தப்போகிறது என்பதுகுறித்து விளக்கம் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை அறிவிக்கை அனுப்பியும் இதுவரை பதிலளிக்கவில்லை. இதன் நோக்கம், கிரானைட் கொள்ளையர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை. கிரானைட் கொள்ளையை மிகப்பெரிய அளவில் நடத்தியது, அ.தி.மு.க மற்றும் தி.மு.க மேலிடங்களின் ஆதரவு பெற்ற நிறுவனங்கள்தான். கிரானைட் கொள்ளைக்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தின் பூகோள அமைப்பே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட சமணர் படுக்கை அமைந்த மலைகள் சிதைக்கப்பட்டுள்ளன; ஏராளமான நீர்நிலைகள் கிரானைட் கற்களைப் பதுக்கிவைக்கும் நீர்ச் சுரங்கங்களாக மாற்றப்பட்டுள்ளன; ஆறுகள் திசை மாற்றி விடப்பட்டுள்ளன. இயற்கைக்கு இவ்வளவு கேடுகளைச் செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்களோ, பெற வேண்டியதைப் பெற்று, அவர்களுக்கு சேவகம் செய்து கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மட்டும் நடந்த கிரானைட் கொள்ளையின் மதிப்பு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று சகாயம் குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் கிரானைட் கொள்ளையின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தமிழகத்தின் ஆண்டு பட்ஜெட் மதிப்பை விட 3 மடங்குக்கும் அதிகமாகும். இதற்குக் காரணமானவர்களைத் தண்டித்து, அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யாமல் இருப்பது  தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். அதைத்தான் தமிழக ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்.

மேலூர் வட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளைகள் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மீது 180 வழக்குகள் தொடரப்பட்டு மேலூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகின்றன. கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கிய 98 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், அவ்வழக்குகளை விசாரிக்க மேலூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி மறுத்துவிட்டார். மேலும், இரு வழக்குகளில் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களை விடுதலைசெய்த நீதிபதி, அவர்கள் மீது பொய்வழக்குத் தொடர்ந்ததாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டார். இவை அனைத்துமே ஆட்சியாளர்களின் துணையுடன் நடந்தவை ஆகும். இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால், சில தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி, இந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்வதை தமிழக அரசு தாமதம் செய்துவருகிறது. இதுவும் கிரானைட் கொள்ளையரைப் பாதுகாக்கும் செயலே.

அதுமட்டுமன்றி, கிரானைட் கொள்ளைகுறித்து விசாரிக்கும் சகாயம் குழுவை முடக்கும் செயலிலும் தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது. அதனால், சகாயம் குழுவின் பதவிக்காலம் வரும் 14-ம் தேதியுடன்  முடித்துவைக்கப்படுகிறது. மேலூர் வட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளைகுறித்து சி.பி.ஐ விசாரணை தொடங்காத நிலையில் சகாயம் குழுவை கலைப்பது முறையல்ல.  மேலும், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த கிரானைட் கொள்ளைகுறித்தும் விசாரிக்கவேண்டியிருப்பதால், சகாயம் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும். கிரானைட் கொள்ளைகுறித்து உடனடியாக சி.பி.ஐ தலைமையில் பல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!