தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க நீதிமன்றம் அனுமதி! | Navodaya schools case: HC gives permission to start Navodaya schools in TN

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (11/09/2017)

கடைசி தொடர்பு:15:00 (11/09/2017)

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க நீதிமன்றம் அனுமதி!

’ எட்டு வாரத்தில், நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்குவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். மேலும், தொடங்குவதற்குத் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

குமரி மகா சபையின் செயலர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், 'கல்விக்காக தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் செலவுசெய்ய வேண்டியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும்  என்ற நோக்கில், மத்திய அரசால்1986-ம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா  பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில், மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகின்றன. ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. ஆனால், மாநில அரசு இந்தப் பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே,  தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு, ஏற்கெனவே நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, நவோதயா பள்ளிகளில்  தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பள்ளியைப்பற்றி தவறான புரிதல் வேண்டாம். ஏழை மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு, இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் அனைத்தும் இலவசமே. மேலும், இந்தியாவில் உள்ள 598 நவோதயா பள்ளிகளிலிருந்து 14,183 மாணவர்கள் நீட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.  இதில் 11,875 மாணவர்கள் தகுதிபெற்றனர்.  இதில் 7000 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.  எனவே, ஏழை மாணவர்களுக்கு இலவச,   தரமான  கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர் . தமிழக அரசு சரியான பதில் அளிக்காத நிலையில்...

தமிழக அரசு இதுகுறித்து கருத்து தெரிவிக்க, இதுதான் கடைசி வாய்ப்பு. கருத்து தெரிவிக்கவில்லை என்றால், உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்து இன்றைய  தேதிக்கு  ஒத்திவைத்தனர் .

இந்நிலையில், மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, " எட்டு வாரத்தில் நவோதயா பள்ளி தமிழகத்தில் தொடங்குவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். மேலும், தொடங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது .