வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (12/09/2017)

கடைசி தொடர்பு:12:43 (12/09/2017)

“15-வது தடவை காட்டுக்குள்ள போனப்பதான் புலி கண்ணுல பட்டுச்சு..!” - வனவிலங்கு புகைப்படக்கலைஞர் சீமா

ஒரு புகைப்படம் ஆயிரம் கதை சொல்லும் என்பார்கள். ஆனால், ஒரு வனப்புகைப்படம் பத்தாயிரம் கதை சொல்லும். கொட்டும் மழையில், மலைச்சரிவில் அமர்ந்துகொண்டு காத்திருந்து ஒரு வனவிலங்கை படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. கடந்த ஏழு வருடங்களாக அதைச் சிறப்பாக செய்துவரும் கேரளாவைச் சேர்ந்த பிரபல பெண் வன புகைப்படக்காரரான சீமா சுரேஷிடம் பேசினோம். தமிழ்நாட்டில் இருந்து அழைக்கிறோம் என்றதும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தார்.

உங்களைப்பற்றி சொல்லுங்களேன்…

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவின் திரிசூர். இப்போதும் அங்கேதான் வசித்துவருகிறேன். என் குடும்பம் பெரியது. சிறு வயதில் இருந்தே எனக்கு வனத்தின் மீதும் வனவிலங்குகள் மீதும் ஆர்வம் அதிகம். விடுமுறை நாள்களில் வனத்துக்குள் டிரெக்கிங் செல்வது என்றால் முதல் ஆளாக நான் தயாராக இருப்பேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் பிரபல கேரள இதழான கலாகோமுதியில் வேலைக்குச் சேர்ந்தேன். சினிமா கட்டுரைகள் எழுதுவதுதான் என் வேலை. தொடர்ந்து கேரளாவின் முன்னணி சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் செய்யும் வேலை மீது சலிப்பு ஏற்பட்டது. தினமும் ஒரே வேலையைச் செய்துகொண்டே இருக்கிறோமே என்ற எண்ணம் ஏற்பட்டது.

பொதுவாகவே எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருடனும் இணைந்து வெளியில் டிரெக்கிங் செல்வது வழக்கம். அப்படி தமிழ்நாட்டின் முதுமலை வனத்துக்கு டிரெக்கிங் சென்றோம். அப்போது ஓர் ஆண் யானையைப் பார்த்தோம். அந்த யானை மிகவும் கோபமாக இருந்தது. சத்தம் போட்டுக்கொண்டே அந்தப் கோபத்தை அருகில் இருந்த ஒரு மரத்தின்மீது காட்டிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த மரத்தை கீழே சாய்த்து தன் கோபத்தை தணித்துக்கொண்ட மன நிறைவோடு காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டது. அதனை எனது கேமராவால் தொடர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தேன். அந்த சம்பவம்தான் என் வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. ஒரு வனவிலங்குகளுக்கும் நம்மைப் போலவே கோபம், பொறுமை, மகிழ்ச்சி என எல்லாமும் இருப்பதை உணர்ந்துகொண்டேன். நாம் ஏன் வன விலங்கு புகைப்படக்காரராக ஆகக்கூடாது என்று தோன்றியது. அதை வீட்டில் சொன்னேன். என் கணவர் ஒரு புகைப்படக்காரர் என்பதால் என்னுடைய விருப்பம் எளிதில் நிறைவேறியது. உடனே, பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கேமராவைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தேன். இன்று வரை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறேன்.”

நீங்கள் இதுவரை எடுத்த படங்களில் மிகவும் பாராட்டப்பட்டது எது?

“தமிழ்நாட்டில் நான் முதன் முதலாக எடுத்த யானையின் படம்தான் அதிக பாராட்டுகளை பெற்றது. அதனாலேயே எனக்கு தமிழ்நாட்டின் மீது அதிக பாசம் என்று கூட சொல்லலாம். அடுத்ததாக கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பந்திபூர் சரணலாயத்தில் ‘பிரின்ஸ்’ என்ற புலியை படம் எடுத்தது அதிக பாராட்டுகளை பெற்றது. எல்லா புகைப்படக்காரர்களும் காட்டுக்குள் இருக்கும் புலியைப் படம் எடுக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். எளிதில் அந்த வாய்ப்பு அமையாது. இதுவரை நான் 14 முறை பந்திபூர் சரணலாயத்துக்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புலியை படம் எடுக்க முடியாத ஏக்கத்தோடு தான் வீட்டுக்கு வருவேன். 15-வது முறை சென்றிருந்தபோது ஒரு புல்வெளியில் இயல்பாக நடந்துவந்துகொண்டிருந்தது புலி. என் ஆசை நிறைவேறியது. அந்தச் சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.

புலி

அதேபோல் ‘ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சிப்பறவை’ என் கேமராக்களில் அதிகமாக பிடிபடும். ஆனால், திடீரென மூன்று வருடங்களாக என் கண்களில் ஹார்ன்பில் சிக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த சமயம் ஒரு டிரெக்கிங் போன போது ஒரு ஜோடி ஹார்ன்பில் பழங்களை தங்களுக்குள் ஊட்டிவிட்டுக்கொண்டு காதல் செய்துகொண்டிருப்பதை பார்த்தேன். சுமார் 5 மணி நேரம் அந்த ஹார்ன்பில்களை புகைப்படம் எடுத்தேன். அவையும் சலிக்காமல் காதல் செய்துகொண்டிருந்தன. அந்தத் தருணம் என்னை காடுகளோடும், காட்டு உயிரினங்களோடும் நெருக்கமாகக் கொண்டு சென்றது. அதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் இந்தியாவின் முதல் தேசிய பூங்காவான ’ஜிம் கார்பெட்’ தேசிய பூங்காவில் நீர் நாய்களை படம் எடுத்தேன். கடும் குளிரில் நடுங்கிக்கொண்டே நான் படம் எடுக்க, அவை மீன்களை வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு ஜாலியாக மீன்களை பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. அந்த நீர்நாய்களின் படம் அதிக பாராட்டுகளைப் பெற்றது.”

இளம் தலைமுறை புகைப்படக் கலைஞர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது என்ன?

“இப்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புகைப்படக் கலைஞராவது எளிது. அதில் சிறப்பாக மாறுவதற்கு பொறுமையும், கற்பனைத்திறனும் வேண்டும். ஒரு யானைதானே என்று அதை இயல்பாக புகைப்படம் எடுத்துவிட்டு வரலாம், அதனோடு பொறுமையாக பயணம் செய்தால், அவை சாப்பிடுவது, சேட்டை செய்வது, சண்டை போடுவது என அவற்றின் அசாதாரண தருணங்களை படம் எடுக்க முடியும். அதேபோல் ஒரு படத்தின் கோணம் மிக முக்கியம். ஒரு சாதாரண மனிதன் ஒரு வன விலங்கை பார்ப்பதற்கும், ஒரு புகைப்படக் கலைஞன் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்க வேண்டும். யாருமே எதிர்பார்க்காத கோணத்தில் படத்தை எடுக்க வேண்டும். அவைதான் நம்மை தனித்துவமாக காட்டும்.” என்றார் நிறைவாக.

பார்த்துக்கொண்டிருந்த பத்திரிகை துறை வேலையை விட்டு விட்டு கையில் கேமராவோடு காட்டுக்குள் பயணம் செய்யும் சீமா சுரேஷ், இளம் தலைமுறைகள் காட்டின் மீது எப்போது அக்கறை கொண்டிருக்க, அவர்களுக்கு இலவசமாக வைல்ட் லைஃப் போட்டோகிராபி பயிற்சியும் கொடுக்கிறார் என்பது கூடுதல் தகவல்.


டிரெண்டிங் @ விகடன்