ஏற்கப்படுமா தொழிலாளர்களின் கோரிக்கை? செப்.24-ல் பஸ் ஸ்டிரைக்!

பஸ் ஸ்டிரைக்

மிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய ஊதிய ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, 2016 செப்டம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்ந்து காலதாமதமாகிக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையும் வருவாய் இழப்பைக் காரணம்காட்டி, தமிழக அரசு இன்னமும் வழங்காமல் இருந்து வருகிறது. இதையடுத்து, போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பஸ் ஸ்டிரைக் உட்பட பல்வேறு கட்டங்களாகப் போராட்டங்களை நடத்தியதால், பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒன்பது கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியும், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக எவ்வித சுமுக உடன்பாடும் இதுவரை எட்டப்படவில்லை.

இதனால், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், போக்குவரத்துத் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், அரசு சார்பில் இரு தினங்களுக்கு முன் பத்தாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. தொழிலாளர்கள் முன்வைத்துள்ள ஊதிய உயர்வுத் தொகையை ஏற்கமுடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதுடன், ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை வழங்குவதில் உடனடி நடவடிக்கைகள் ஏதும் எடுக்கமுடியாது; அதற்கு கால அவகாசம் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனியும் பயன் ஏதும் இல்லை என்பதால், வரும் 24-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று ஓரிரு சங்கங்கள் தவிர்த்து, இதர அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளன.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள், வேலைநிறுத்தம் தொடர்பான முடிவெடுக்கப்பட்டது.

பஸ் ஸ்டிரைக்

செப்டம்பர் 24-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வது என்ற முடிவைத் தெரிவித்து, அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், போக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் தொழிலாளர் துறை கமிஷனர் ஆகியோருக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் சார்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொருளாளர் கி.நடராஜன் கூறுகையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 13-வது ஊதிய ஒப்பந்தம் சம்பந்தமாக இதுவரை நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் ‘போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசே ஈடு செய்யவேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தோம்.

போக்குவரத்து கழகத்தில் பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி, பங்களிப்பு ஓய்வூதிய தொகை, பணிக்கொடை நிதி, விடுப்பு சம்பளம் உள்பட ஐந்தாயிரத்து 400 கோடி ரூபாயையும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.1,600 கோடியையும் அரசு செலவு செய்திருக்கிறது. அந்தத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். 'செப்டம்பர் மாதத்தில் தொழிலாளர்கள் பிரச்னைகளை இறுதி செய்வோம்' என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரச்சினைகளை சரிசெய்யக்கூடிய எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த மூன்று மாத காலத்தில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பணம் 600 கோடி ரூபாய் உரிய கணக்குக் காட்டப்படாமல் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், எங்கள் பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக, நாங்கள் முன்வைத்த கோரிக்கையும் அரசால் ஏற்கப்படவில்லை.

குறைந்தபட்ச ஊதிய உயர்வாக ரூ.860-ம், அதிகபட்சமாக, அதாவது 29 வருடம் பணியாற்றிய அனுபவம்மிக்க தொழிலாளர்களுக்கு இரண்டாயிரத்து 300 ரூபாய் மட்டுமே சம்பள உயர்வாகத் தரப்படும் என்று பேச்சுவார்த்தையின்போது அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்தத் தொகை எங்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே, எங்கள் நியாயமான கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என்று அரசுக்கு எடுத்துக் கூறியிருக்கிறோம். வேலைநிறுத்த முன் அறிவிப்பு தொடர்பான கடிதத்தையும் அளித்துள்ளோம். அதன்படி, வருகிற 24-ம் தேதியோ அல்லது அதற்கு பின்னர் முடிவு செய்கிற தேதியிலோ திட்டமிட்டபடி போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும். இந்த வேலைநிறுத்தத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள். அதற்கு முன்பாகப், பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால், திறந்தமனதுடன் பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!