சினிமா விருது விழாவைப் புறக்கணித்த நடிகர்கள்! கொந்தளித்த கேரள முதல்வர்

கேரளாவில் சினிமா விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ளாத மலையாள நடிகர், நடிகைகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் கேரள அரசு சிறந்த திரைக் கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த ஆண்டு சிறந்த மலையாள நடிகருக்கான விருதுக்கு விநாயகனும், சிறந்த நடிகையாக ரெஜிஷாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். சிறந்த திரைக் கலைஞர்களுக்கான கேரள அரசு விருது நேற்று இரவு கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறந்த திரைக் கலைஞர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் விருதுகளை வழங்கினார். இவ்விழாவில் கலந்துகொள்ள மலையாள நடிகர் சங்கத் தலைவர் இன்னசென்ட் எம்.பி. , பழம்பெரும் நடிகர் மது, ஷீலா, மஞ்சு வாரியர் போன்ற பல சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், விருது பெறுபவர்கள் மட்டும் நிகழ்வுக்கு வந்திருந்தனர். வேறு எந்த பிரபல நடிகர், நடிகைகளும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. விருதுகளை  வழங்கிவிட்டு முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது, ''சினிமா என்ற கலையை ஊக்குவிப்பதற்காகத்தான் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் விருது பெறுபவர்கள் மட்டும் கலந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. விருது கிடைக்காவிட்டாலும் சினிமா கலைஞர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும். அது விருது பெறுபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். சினிமா விருது வழங்கும் விழாவுக்கு யாரையும் தனித் தனியாக அழைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இதுசினிமா கலைஞர்களுக்காக நடத்தப்படும் விழா என நினைத்து அனைத்து கலைஞர்களும் விழாவுக்கு வரவேண்டும்'' என்று பேசினார்.

கேரள அரசின் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சியைப் புறக்கணித்த சினிமாத் துறையினருக்கு, முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளது, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!