'அவசரப்பட்டுவிட்டார் தினகரன்!' - முதல்வர் சந்திப்புக்குப் பின் சீறிய ரித்தீஷ்

முதல்வர் எடப்பாடியைச் சந்தித்த நடிகர் ரித்தீஷ்

தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த நடிகர் ரித்தீஷ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளார். பொதுக்குழு கூட்டம் குறித்தும் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பது குறித்தும் தீவிர ஆலோசனை நடந்திருக்கிறது. ரித்தீஷிடம் பேசினோம்.

முதல்வரைத் திடீரென ஏன் சந்தித்தீர்கள்?

"எங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரைச் சந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது? அவர் பங்கேற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா உருவாக்கிக் கொடுத்த ஆட்சித் தொடர வேண்டும். அதற்காகத்தான் முதல்வரைச் சந்தித்தேன்."

முதல்வரை மாற்ற வேண்டும் என்று தினகரன் சொல்வதற்கு என்ன காரணம்?

"போகாத ஊருக்கு ஏன் வழி சொல்ல வேண்டும்? ஜெயலலிதா வழியில் திறம்பட ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர். அவரை மாற்ற வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. முதல்வரிடம் என்ன பேசினீர்கள்?" அ.தி.மு.க-வின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதித்தோம். இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்பது குறித்துப் பேசினேன். தினகரன் குறித்து எதுவும் பேசிவில்லை."

நடிகர் ரித்தீஷ், தினகரன்

தினகரன் மீது ஏன் அதிருப்தி??

"அவர் மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஆட்சிக் கவிழக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த அ,தி.மு.க தொண்டர்களின் எண்ணம். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் நினைக்கின்றனர். தினகரன் மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை."

கட்சி நிர்வாகிகளை தினகரன் மாற்றுவது சரியா?

"ஒட்டுமொத்தமாக நிர்வாகிகளை மாற்றுவதால் கடும் குழப்பம் ஏற்படுகிறது. நிர்வாகிகளை மாற்றியதில் தினகரன் அவசரப்பட்டுவிட்டார். அவரை யாரோ தவறாக வழிநடத்துவதாக சந்தேகப்படுகிறேன். தினகரனைப் பொறுத்தவரை எந்தச் செயலிலும் அமைதியாகவும் திறமையாகவும் செயல்படுவார். கட்சியை நிர்வாகம் செய்யும்போது அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். முதல்வரை மாற்றுவது எம்.எல்.ஏ-க்கள் கையில்தான் இருக்கிறது."

Do you like the story?

Please Appreciate the Author by clapping!