வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (11/09/2017)

கடைசி தொடர்பு:17:12 (11/09/2017)

டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு!

செப்டம்பர் 16-ம் தேதி டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்த பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது.


அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தினகரன் அணி சார்பில் 9-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் சட்ட ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது. அதையடுத்து டி.டி.வி.தினகரன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்தார். மேலும் செப்டம்பர் 16-ம் தேதி திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்த பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது. அதேநாளில் வேறு ஒருவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து தெரிவித்த டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி, 'இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று பொதுக்கூட்டத்தை நடத்துவோம்' என்று தெரிவித்தார்.