வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (11/09/2017)

கடைசி தொடர்பு:17:25 (11/09/2017)

பாரதியார் நினைவு தினம் எப்போது? - அரசு ஆவணம் எழுப்பிய சர்ச்சை

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 12-ம் தேதிதான் என தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பாரதியார் நினைவு அறக்கட்டளையின் நிறுவனர் முத்துமுருகன் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.

bharathi death certificate

 

muthumuruganமுத்துமுருகனிடம் பேசினோம், ''பாரதியாரின் நினைவு தினம், அவர் இறந்ததிலிருந்து
91 ஆண்டுகள் வரை செப்டம்பர் 11-ம் தேதியில்தான் அனுசரிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி மீது பற்றுகொண்ட ஒருவர் பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11-ம் தேதியா 12-ம் தேதியா ? எனத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேள்வி எழுப்பினார். ''1921, செப்டம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு பாரதி மறைந்ததால், அது 12-ம் தேதியாகி விடுகிறது. எனவே பாரதியார் நினைவுநாள் செப்டம்பர் 12-ம் தேதிதான்‘’என சென்னை மாநகராட்சி பதில் வழங்கியதோடு பாரதியாரின் இறப்புச்சான்றிதழ் நகலையும் வெளியிட்டது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் பராமரிப்பின்கீழ் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் பிறந்தவீடு மற்றும் மணிமண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் பாரதியின் மறைவு நாளை 11-ம் தேதியிலிருந்து 12-ம் தேதியாக திருத்தம் செய்யப்பட்டது. 

கடந்த 5 ஆண்டுகளாக செப்டம்பர் 12-ம் தேதியில்தான் பாரதியின் நினைவு தினத்தை எட்டயபுரத்தில் அனுசரித்து வருகிறோம். பழைய பள்ளி பாடப்புத்தகங்களிலும் தினசரி காலண்டர்களிலும் திருத்தம் செய்யப்படாமல் அப்படியே பிரிண்ட் ஆகிவிடுவதால் செப்டம்பர் 11-ம் தேதியிலேயே பாரதி நினைவு தினத்தைப் பல தமிழ் அமைப்புகளும் பள்ளி, கல்லூரிகளும் அனுசரித்து வருகின்றன. பாரதி நினைவு தினத்தை எட்டயபுரத்தில் நாளை (12-ம் தேதி ) செவ்வாய்க்கிழமைதான் அனுசரிக்க இருக்கிறோம்.

kalvettu

காலையில் பாரதி வேடமணிந்த பள்ளி மாணவர்கள் பாரதி இல்லம் மற்றும் மணிமண்டபத்திலுள்ள பாரதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்து, பாரதி இல்லத்திலிருந்து மணிமண்டபம் வரை பேரணியாக வர உள்ளனர். தவிர பல தமிழ் அமைப்புகள் சார்பாக பாரதி குறித்த இலக்கிய சொற்பொழிவும் மணிமண்டபத்தில் நாளைதான் நடக்க உள்ளன’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க