வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (11/09/2017)

கடைசி தொடர்பு:18:50 (11/09/2017)

களைகட்டுகிறது மகாபுஷ்கரத் திருவிழா!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முதன்முறையாக காவிரி மகாபுஷ்கரத் திருவிழா நாளை (12.9.2017) நடைபெறவுள்ளது.  மேட்டூருக்கும், பூம்புகாருக்கும் இடையே உள்ள காவிரியில் தண்ணீர் இல்லாத நிலையில், துலாக்கட்டத்தில் ரூ.2 கோடி செலவில் புதிதாக நீர்த்தேக்கத்தொட்டிக் கட்டி, அதில் 3 அடி ஆழத்துக்கு நீர்நிரப்பி அதில்தான் பக்தர்கள் புனிதநீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அழுக்குநீர் வெளியேற்றப்படவும், புதியநீர் நிரப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 12 கிணறுகளும் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, அதில் 12 நதிகளின் பெயர் சூட்டப்பட்டு அதிலும் நீர்நிரப்பி இருக்கிறார்கள்.  இரவு, பகல் என 24 மணிநேரமும் பக்தர்கள் புனிதநீராட மின்னொளி வசதி செய்யப்பட்டுள்ளது.

வண்ண விளக்குகளால் துலாக்கட்டமே ஜொலிக்கிறது. தர்ப்பணம் போன்ற சடங்குகள், தானங்கள், ஹோமங்கள் செய்வதற்கும் தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் 12 நாள்களிலும், வேதபாராயணம், மகாமுத்ர பாராயணம், சதுர்வேத பாராயணம், மகா ருத்ரஹோமம், திருமுறை பாராயணம், லலிதா விஷ்ணு சகஸ்ர நாம பாராயணங்கள் மற்றும் காவிரியில் ஆரத்தி எடுத்தல், கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன. வைணவப் பக்தர்களுக்கு திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் தீர்த்தவாரி செய்யும் பெருமாள் படித்துறையில் சின்னதாய் குழிவெட்டி அதில் போர்வெல் மூலம் நீர்நிரப்பி புனிதநீராட வசதி செய்திருக்கிறார்கள்.  

கடந்த 2 மாதங்களாக அன்னை ஞானேஸ்வரி கிரி தலைமையில் 1008 பெண்கள் லலிதா விஷ்ணு சகஸ்ர நாம பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு இன்று (11.9.2017) துலாக்கட்டத்தில் சிறப்பு பூஜை நடத்தி அனைவர் கைகளிலும் கங்கணம் கட்டி ஆரத்தி எடுத்து ஒத்திகைப் பார்த்தார்கள். இன்று மாலை 7 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மற்றும் விஜேயேந்திரர் இருவரும் மயிலாடுதுறைக்கு வருகைதந்து வடக்கு இராமலிங்க தெருவில் உள்ள சங்கர்ராமன் என்பவர் வீட்டில் தங்குகிறார்கள்.  நாளை காலை துலாக்கட்டத்தில் புஷ்கரத் திருவிழாவுக்கான கொடியை ஜெயேந்திரர் தலைமையில் ஏற்றப்பட்டு முறைப்படி மகாபுஷ்கரத் திருவிழா தொடங்கவுள்ளது. 12 நாள்களும் புனிதநீராடி பாவங்களைப் போக்க பக்தர்கள் வருகையால் மயிலாடுதுறை நகரமே களைக்கட்ட ஆரம்பித்திருக்கிறது.  


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க