உசிலம்பட்டியைப் பசுமையாக்கத் தீவிரமாகப் பங்காற்றும் மக்கள்

உசிலம்பட்டி வட்டாரத்தைப் பசுமையாக மாற்றும் திட்டத்துடன் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். வாகனம் மூலம் ஒவ்வொரு ஊராக எடுத்துச் சென்று அந்தந்தப் பகுதி மக்களின் பங்களிப்புடன் இத்திட்டத்தை இளைஞர்கள் செயல்படுத்திவருகிறார்கள். இது பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்த அவர்களும் பங்காற்றி வருகிறார்கள். 

உசிலம்பட்டி


தேனி மாவட்டத்தில் உருவாகும் வைகை நதி, உசிலம்பட்டி வட்டாரத்தை குளிரவைத்துவிட்டுத்தான் மதுரைக்குள் எட்டிப்பார்க்கும். அந்தளவுக்கு வைகையால் பசுமையாய் விளங்கிய உசிலம்பட்டி வட்டாரம், சமீபகாலமாக தண்ணீரின்றி, போதிய பருவமழையின்றி, வறண்ட பகுதியாகிவிட்டது.  விவசாயமில்லாமல் பிழைப்பதற்காக வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும் நிலை ஏற்பட்டது.  இயற்கை மீதும், அரசு மீதும் பழியைப் போடாமல், பிறந்த மண்ணை நாமே வளமாக்குவோம் என்று உசிலம்பட்டி இளைஞர்கள், சமூகஆர்வலர்கள் என பலரும் களத்தில் இறங்கியுள்ளனர். 

ஒருலட்சம் மரக்கன்று நடும் இலக்குடன் ஒரு புரட்சியைத் தொடங்கியுள்ளனர். வாகனங்களில் செடிகளை ஏற்றிக்கொண்டு ஊர்ஊராக  செல்கிறார்கள். குழி தயார், மரக்கன்று தயார், நீங்கள் தயாரா என்று மக்களை உசுப்பி விடுகிறார்கள். ஜெய்பூரில் வசிக்கும் இதே ஊரைச் சேர்ந்த அன்பு என்பவரின்  உறவினர்களும் மலைப்பட்டியில் இப்பணியில் ஈடுபட்டார்கள். விருப்பமுள்ள யாரும் இப்பணியில் பங்கேற்று, நடும் மரங்களுக்கு விருப்பமான பெயரை சூட்டிக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்கள். இப்பணி தொய்வின்றி தொடர்ந்தால் உசிலம்பட்டி, விரைவில்  உசிலம் சோலையாக மாறும் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!