வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (11/09/2017)

கடைசி தொடர்பு:18:10 (11/09/2017)

இழுத்தடிக்கப்படும் திருமுருகன் காந்தி வழக்கு!

திருமுருகன் காந்தி

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணையும் இழுத்துக்கொண்டே போகிறது.

திருமுருகன் மற்றும் மூன்று பேரை அடுத்து ஒன்றரை மாதம் கழித்து குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட சேலம் வளர்மதி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அவர் மீதான குண்டர்சட்டத்தை ரத்துசெய்து தீர்ப்பளித்தது. அதையடுத்து திருமுருகன் காந்தி உட்பட நால்வர் மீதான வழக்கிலும் தீர்ப்பு கூறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த வாரத் தொடக்கத்தில் செவ்வாயன்று இவர்களின் வழக்கில் அரசுத் தலைமை வழக்கறிஞர் வாதாடுவார் எனக் கூறப்பட்டதை ஏற்ற உயர் நீதிமன்றம், அன்று வழக்கில் தீர்ப்பு கூறும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், வழக்கு விசாரணையை நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் வியாழக்கிழமைக்குத் தள்ளிவைத்தனர். மறுபடியும் அது வெள்ளியன்று தள்ளிவைக்கப்பட்டது. வெள்ளியன்று நீதிபதி விடுமுறை என்பதால் இன்றைக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இல்லை என்பதால், மீண்டும் நாளை மறுநாளைக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. அரசாங்கத் தரப்பில் இப்படி வாய்தா மேல் வாய்தா வாங்குவது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.