வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (11/09/2017)

கடைசி தொடர்பு:20:20 (11/09/2017)

அழைத்தவுடன் 9 நிமிடத்தில் வந்துசேரும் 108 ஆம்புலன்ஸ்!

தமிழக அரசின், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தால் இயங்கப்பட்டுவரும் 24 மணிநேர 108 அவசரகால சேவை தற்பொழுது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 923 அவசரகால ஊர்திகளை இயக்கி வருகிறது. பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பை 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ambulance

இதுகுறித்து வெளியான அறிக்கையில்,’108 அவசரகாலச் சேவையை மேலும் செம்மைப்படுத்தவும், அவசரகால அழைப்பு வந்தவுடன் சென்று சேரும் கால அளவைக் குறைக்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசு புதிய 108 அவசரகால ஊர்திகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்மூலம் ஏழை எளிய மக்கள் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். இதன்படி கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 41 ஊர்திகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 108 அவசரகாலச் சேவை மையம் மற்றும் தமிழ்நாடு அரசின் புவிசார் தகவல் அமைப்போடு (TNGIS) இணைந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அதிகமான அவசரகால அழைப்புகள் பெறக்கூடிய பகுதிகள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு கூடுதல் அவசரகால ஊர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

அதிநவீன சிகிச்சை அளிக்கும் பொருட்டு 64 ஊர்திகளில், செயற்கைச் சுவாச கருவி (ventilator), Defibrillator with Multi  Para Monitor, Syringe Pump மற்றும் Infusion Pump பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அவசரகால ஊர்திகளில் GPS கருவிகளும் முழுமையாகப் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அவசரகாலத்தில் அழைப்பவரின் இடத்தை துல்லியமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கண்டறியும் விதத்தில் புதிய செயலியம் (PILOT Mobile APP) android அலைபேசியும் மிகவிரைவில் வழங்கப்படவுள்ளது. தற்போது சோதனை வடிவில் உள்ள 108 அவசரகால செயலியும் மிகவிரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 2017ல், 108 சேவை துவங்கியதிலிருந்து இன்று வரை மிக அதிகமாக 1,12,716 பயன்பெற்றனர். இவற்றில் 25% பேர் கருவுற்ற தாய்மார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது சென்னை மாநகரத்தில் 108 அவசரகால சேவை மையத்துக்கு அழைப்பு பெறப்பட்டதிலிருந்து 108 ஊர்தி அழைத்தவரை சராசரியாக சென்றடையும் நேரம் (Response Time) 13 நிமிடத்திலிருந்து 9 நிமிடம் 33 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிகமான கருவுற்ற தாய்மார்கள் 108 அவசரகால சேவையைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கல்வியாண்டில், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த '108 நண்பர்கள் குழு'' கல்லூரிகளில் தொடங்கப்பட்டு வருகிறது. எந்த எதிர்பார்ப்புமின்றி 108 அழைத்து உயிரைக் காப்பாற்ற உதவியவர்களைப் பாராட்டும் விதமாக மாவட்டம்தோறும் ''சிறந்த மனிதர்களுக்கான பாராட்டு விழாவும்'' நடத்தப்பட்டு வருகிறது.  

108 அவசரகாலச் சேவையை இன்னும் சிறப்பாகவும் விரைவாகவும் மக்களுக்கு கிடைத்திட, தொழிநுட்ப ரீதியாகவும், கூடுதல் ஊர்திகள் மூலமாகவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ இவ்வாறு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.