வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (11/09/2017)

கடைசி தொடர்பு:20:43 (11/09/2017)

ஒரிஜினல் லைசென்ஸ் ! இன்னொரு பக்கம் தெரியுமா ?


''ஒரிஜினல் லைசென்ஸ் அவசியம்' -பெரியய்யா

சென்னையில் மட்டுமே தொண்ணூறு சதவீத ஆட்டோக்கள் 'சவாரி' க்குப் போகாமல்   ஆட்டோ உரிமையாளர்களின் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றன... என்கிறார்கள்,  வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகிறவர்கள். 'எங்களை ஒட்டு மொத்தமாக பாதிப்பில் தள்ளியிருப்பது ஒரிஜினல் லைசென்ஸ் கேட்கும் விவகாரம்தான்' என்றும் குற்றஞ் சாட்டுகிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தின் இன்னொரு பக்கம் குறித்தும் ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகிறது.  

'ஒரிஜினல் லைசென்சை எப்போதும் உடன் வைத்திருப்பது சாத்தியம் இல்லை'  எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை  சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வு ஏற்க மறுக்க  ஒரிஜினல் லைசென்ஸ்  கட்டாயம் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.  'டிஜிலாக் செயலி' மூலம் லைசென்ஸை பதிவிறக்கம் செய்து  காட்டினாலே போதும், ஒரிஜினல் லைசென்ஸை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை' என்ற தகவலும் ஒருபக்கம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசாரிடம், 'டிஜிலாக்' பற்றி விபரம் தெரிந்த ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள் வாதத்தில் ஈடுபடுகின்றனர். போலீசாரோ, 'அதெல்லாம் சரிவராது, எங்களுக்கு அப்படி எந்த உத்தரவும் இல்லை. நீங்கள் ஒரிஜினல் லைசென்ஸ் இருந்தால் காட்டிட்டு போய்க்கிட்டே இருங்க' என்று பதில் தருகின்றனர். இந்த வாதத்தினால் கூடுதலாகப் போக்குவரத்து ஸ்தம்பித்துக் கிடப்பது தனிக்கதை.

சென்னை  பெருநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர்  கே. பெரியய்யா : "அதிவேகமாக  வாகனத்தை ஓட்டுதல், போக்குவரத்து சிக்னல் மதியாமை, செல்போனில் பேசியபடி  ஓட்டுதல், குடிபோதையில்  ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல் போன்ற  ஆறுவகையான விதி மீறல்களே உயிரிழப்புகளுக்கு கூடுதல் காரணம் என்கிறது  சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல் குழு.  இந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போனது. மோட்டார் வாகனத்தை இயக்கும் அனைவருமே ஒரிஜினல் லைசென்ஸை கையில் வைத்திருப்பது கட்டாயம் என்று கோர்ட்டும் உறுதியாக சொல்லிவிட்டது.

டிஜிலாக் முறையில் ஓட்டுநர்கள் மட்டுமல்ல, அனைவரும்  தங்களுடைய  அனைத்து ஆவணங்களையும் 'சேவ்' செய்து வைத்துக் கொள்ளலாம், அவ்வளவே. டிஜிலாக் என்பது ஒரு 'ஆப்'தான். இதை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து 'மோட்டார் வெஹிகில் ஆக்ட்' டில்தான் உறுதியான திருத்தம் கொண்டு வர வேண்டும்.  இதை ஏற்பது தொடர்பாக எங்களுக்கு இதுவரையில் எந்த அறிவிப்பும் வரவில்லை  ஒரு வாகன ஓட்டி 'டிஜிலாக்' கை செல்போனிலோ, சிஸ்டத்திலோ  டவுன்லோட் செய்து வைத்து எங்களிடம் காட்டுகிறார், நாங்கள் அதை சரிபார்க்க ஆர்.டி.ஓ. தரப்புக்கு அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருக்கிற சிஸ்டத்தோடு இந்த 'ஆப்'  'மேட்ச்' ஆக வேண்டும்,  அதற்கான  சாத்தியக்கூறு  அங்கு இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். 

எங்களைப் பொறுத்தவரை குடிபோதையிலும், அதிக வேகத்திலும், சிக்னலை மதிக்காமலும் வாகனத்தை ஓட்டுகிறவர்கள்  கையில் ஒரிஜினல் லைசென்ஸ் இருந்தால் அந்த தவறைச் செய்ய மாட்டார்கள். அவர்களிடம் கைப்பற்றும் லைசென்சை நாங்கள், ஆய்வுக்காக ஆர்.டி.ஓ. வுக்குத்தான் அனுப்புவோம். இதுபோன்ற குற்றங்களுக்கு லைசென்ஸை தற்காலிகமாக குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைக்கவும்  முடியும். ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேரை நாங்கள் விதிமீறல் குற்றத்துக்காக பிடித்தால் அதில் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருந்தவர்கள் ஐயாயிரத்து 700 பேர் மட்டும்தான். ஒரிஜினல் லைசென்ஸைக் காட்டச் சொல்வது பலர் திருந்தவும் வழிவகுக்கும்" .

ஆட்டோ டிரைவர்களின் ஆதங்கம் இதுதான்
 

மைக்கேல் : காலையில் இருந்து  ஆட்டோக்களையே சாலையில் அதிகமாய்ப் பார்க்க முடியவில்லை. பாரீஸ் கார்னரில் மட்டுமே அரைமணி நேரத்தில் ஆயிரம் ஆட்டோக்கள் போய் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இன்று மொத்தமாகவே ஐம்பது ஆட்டோக்களைப் பார்க்க முடியவில்லை. என்னுடைய நண்பர்கள் பலரும் வாடகை ஆட்டோ ஓட்டுகிறவர்கள்தான். ஒரிஜினல் லைசென்சை கையில் வாங்கி வைத்துக் கொண்டுதான் ஆட்டோ முதலாளிகள், ஆட்டோவையே கொடுப்பார்கள். ஜெராக்ஸைக் கையில் வைத்துக் கொண்டு ஆட்டோவை ஓட்ட முடியாது என்பதால் அவர்கள் ஆட்டோவை ஓட்ட வில்லை.


செந்தில்குமார் : நான் ஒரிஜினல் லைசென்சைக் கொண்டுவர ரெடிதான். மழையோ, புயலோ ஏதோ பதற்றமான சூழ்நிலையின்  காரணமாகவோ என்னுடைய ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால், ஒரே நாளில் அதை ஆர்.டி.ஓ. ஆபீசுக்குப் போய் வாங்கி விட முடியுமா? முதலில் போலீசுக்குப் போகவேண்டும், அங்கேயே இரண்டுநாள் ஆகும். அடுத்து ஆர்.டி.ஓ. ஆபீசுக்குப் போகவேண்டும், அங்கே பத்து நாளாகி விடும். மொத்தத்தில் பதினைந்து நாள் காலி. என் வீட்டில் அடுப்பும் எரியாது. படிப்பறிவு குறைவாக உள்ள பலர் இந்தத் தொழிலில் உள்ளனர்... இன்னும் சிலர் தங்களை  திருத்திக் கொண்டு ஆட்டோ ஓட்ட வந்துள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளத்தில் தள்ளி விட்டிருக்கிறது, இந்த முடிவு.


சந்துருபாண்டியன் : ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்து போனால் அதை உடனே வாங்க அப்போதெல்லாம் நூறு ரூபாய் செலவாகும். இப்போது அதுவே  ஐயாயிரத்துக்கு வந்திருக்கிறது. ஒரிஜினல் லைசென்ஸை முதலாளிகள் கேட்பதற்கும் காரணம் இருக்கிறது, பலர் தின வாடகையைக் கூட ஒழுங்காகக் கட்ட மாட்டார்கள், எங்களின் பிடி அவர்களிடம் இருக்கவேண்டுமே, அதற்காகத்தான் ஒரிஜினல் லைசென்ஸை முதலாளிகள் கேட்கிறார்கள். 

ட்ரெயிலர் டிரான்ஸ்போர்ட் அதிபர் புல்லட் வி.ரமேஷ் :  டிரான்ஸ்போர்ட் தொழிலில்  30 ஆண்டுகளாக இருக்கிறேன். என்னிடம் நூற்றுக் கணக்கில் டிரைவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம்  ஜெராக்ஸ் டிரைவிங் லைசென்சை வாங்கிக் கொண்டு, லட்ச ரூபாய் மதிப்புள்ள  லாரியை எப்படிக் கொடுத்து அனுப்ப முடியும். அந்த லாரியில் ஏற்றப்படும்  பொருட்களும் பல லட்சம் மதிப்பு கொண்டவைதான். லாரி டிரைவர்களுக்கான  உத்தரவதம் நாங்கள் கொடுக்கிறோம் என்று அரசாங்கம் சொல்லுமா, நாங்கள் ஒரிஜினல் லைசென்ஸையே கேட்கவில்லை, லாரியை கொடுத்து அனுப்புகிறோம்.

ஹாத்தீம்பேக்சென்னை மாநகராட்சி தமிழ்மாநிலக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் ஜி.ஹாத்தீம்பேக் : எல்லா விஷயத்தையும், ஆதார் கார்டில் கொண்டுபோய் லிங்க் கொடுங்க என்கிறது அரசாங்கம், டிரைவிங் லைசென்ஸையும் அப்படி லிங்க் கொடுத்தால் என்ன ? போக்குவரத்து விதிகளை மீறுகிறவரின் ஆதார் கார்டை வாங்கியே அவர் ஜாதகத்தை எடுத்து விடலாமே ?  போலீசாரிடம்  ஒரிஜினல் லைசென்ஸ் மாட்டிக் கொண்டால், அந்த லைசென்ஸை திரும்ப வாங்கத்தான் முடியுமா? அதைவிட  அவர் புது லைசென்ஸையே  வாங்கி விடலாம்.  இன்று நிறைய 'கேப்ஸ்' கள் மூலம் கார்கள் வாடகைக்குக் கிடைக்கிறது. இங்கு கார் ஓட்டும் டிரைவர்கள், சொந்தக் கார் இருந்தால் மட்டுமே ஒரிஜினல் லைசென்ஸோடு காரை ஓட்டிச் செல்ல முடியும். மற்றவர்களுக்கு கலர் ஜெராக்ஸ்தான், லைசென்ஸே. 
  கந்தசாமி

ஆர்.டி.ஐ. ஆர்வலர் எஸ்.கந்தசாமி :   போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நேரடி மோதலை உருவாக்கிக் கொடுத்திருக்கும் திட்டம் இது.  ஆட்டோவை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தால் போலீசும் ஒரிஜினல் லைசென்ஸ் கேட்கும். ஆட்டோவை வாடகைக்கு விட்ட முதலாளியும் ஒரிஜினல் லைசென்ஸை  கேட்கிறார். ஒரே டிரைவரிடம் எப்படி இரண்டு ஒரிஜினல் லைசென்ஸ் இருக்க முடியும் ? மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு மட்டும்தான் இந்த முறை பொருந்தி வரும். ஆட்டோ, கார், வேன், லாரி ஓ ட்டுகிறவர்களுக்கு அன்றாட வயிற்றுப் பாட்டுக்கு இது  சோதனைதான்.

ஆட்டோ உரிமையாளர் அருண்
ஆட்டோ உரிமையாளர் அருண் : என்னிடம் ஐந்து ஆட்டோக்கள் இருக்கிறது, அனைத்தையும் வாடகைக்கு விட்டிருக்கிறேன். டிரைவர்களின் ஒரிஜினல் லைசென்ஸை வாங்கி வைக்காமல் வண்டியையே கொடுக்க மாட்டேன். அவர்கள் ஆட்டோவோடு காணாமல் போய்விட்டால் ஜெராக்ஸ் லைசென்ஸை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது ? ஒரிஜினல் லைசென்சை நான் வாங்கக் கூடாது என்றால் அதற்கு  மாற்றுவழி என்ன  என்பதை அரசாங்கம்தான் சொல்ல வேண்டும்.

     'அலைமோதும் மக்கள்' : ஆர்.டி.ஓ.பேட்டி ஆர்.டி.ஓ. நெடுமாறன்
சென்னை பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.) சி.நெடுமாறன் : "உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் குழு அறிவுரைப்படியே, ஒரிஜினல் லைசென்ஸ் என்பது இப்போது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. சாலை விபத்துகளை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளில் பலரிடம் ஒரிஜினல் லைசென்ஸே இல்லை.  விபத்தை ஏற்படுத்துகிறவர்கள், சாலை விதிகளை மீறினால் அதற்கான அபராதத்தை செலுத்தி விட்டு மீண்டும் வாகனத்தை அடுத்தநாளே எடுத்து ஓட்ட ஆரம்பித்தார்கள்.  கையில் இருக்கும் ஜெராக்ஸ் லைசென்ஸை ஆர்.டி.ஓ. அல்லது போலீசிடம் ஒப்படைத்து விட்டு இன்னொரு ஜெராக்ஸ் லைசென்ஸைக் வைத்துக் கொண்டு  வண்டியை ஓட்டினார்கள்.

அடுத்தடுத்து  ஏற்படுத்தும் சாலைவிதிமீறல் குற்றங்கள் அனைத்துக்கும் ஜெராக்ஸ் லைசென்ஸையே கொடுத்து வந்தார்கள். இனி அப்படி நடக்க வாய்ப்பில்லை.  ஜெராக்ஸ் லைசென்ஸ் விபரத்தை வைத்து கணினி மூலம் முந்தைய விபத்துகளை 'அப்டேட்' செய்யும் வசதியும்  இல்லை.  புதுப்பித்தல், பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்), ஓட்டுநர் உரிமம் மற்றும் பல ஆண்டுகள் காலாவதியான உரிமத்தைப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு இப்போது அவசியம் ஏற்பட்டுள்ளது, மக்கள் திரளாக குவியும் காரணமும் அதுதான். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இனி, புதிய மோட்டார்    வாகனங்களை வாங்க  முடியாத நிலையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்களும் (ஆர்.டி.ஓ.அலுவலகம்) வழக்கத்தை விட ஒருமணி நேரம் முன்னதாக பணிக்கு வந்து, லைசென்ஸ் குறித்த பணிகளை முடிக்க கூடுதலாக இரண்டு மணிநேரம் இருக்கையில் இருக்கிறோம். கடந்த ஒருவாரமாக இது நடைமுறையில் உள்ளது. அதேபோல் மூன்று கவுன்ட்டர்களை கூடுதலாகத் திறந்து வைத்து வேலை பார்க்கிறோம். கடந்த வாரம் விடுமுறை நாளான சனிக்கிழமையும் ஆர்.டி.ஓ. அலுவலகம் பொதுமக்களின் சேவைக்காக இயங்கியது." 

வேகம் இல்லாத இன்டெர்நெட் 

 ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு இணையதள சேவையை பி.எஸ்.என்.எல். செய்து வருகிறது.  ஆனால், இணையத் தொடர்பில், ஹை ஸ்பீடு வசதி இல்லை.  பல இடங்களில் ஆர்.டி. ஓ.க்கள், 'ஜியோ-சிம்'  கார்டைத்தான்  நம்பிக் கொண்டிருக்கிறார்கள். லைசென்ஸ்  எடுக்க, அல்லது உரிமம் புதுப்பிக்க வரும் ஒருவரை புகைப்படம் எடுத்ததும் அவர் கணினி பிளேட்டில் போடும் கையெழுத்து ஸ்க்ரீனில் அப்டேட் ஆகவே, மணிக்கணக்கில் நேரம் பிடிக்கிறது. இதுதவிர காலையில் இருந்து பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பதும் தனிக்கதை.  இதனால் அதிக பட்சமாகவே, ஒருநாளில் 15 பேருக்குத்தான் ஆர்.டி.ஓ. ஆபீசில் சர்வீஸ் செய்ய முடியும்.ஒரிஜினல் லைசென்ஸ் ஏன் தேவை என்று போலீசும், கோர்ட்டும்  தங்கள் தரப்பிலான காரணங்களை விளக்கியிருக்கிறது.  முதலாளியிடம் ஒரிஜினல் லைசென்ஸ், அடமானத்துக்குப் போன பின்னர்தான் வாடகை ஆட்டோ, வேன், லாரி, கார்களை, தொழிலாளிகள் கையில் முதலாளிகள்  ஒப்படைக்கிறார்கள்...
மோட்டார் வாகன ஓட்டுநர்களுக்கான 'சூரிட்டி' யை உறுதி செய்யப்போவது யார்  ?

 

 


டிரெண்டிங் @ விகடன்