வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (12/09/2017)

கடைசி தொடர்பு:15:28 (12/09/2017)

“அனிதா என் தங்கை!” - அனிதா குடும்பத்தாரிடம் உருகிய விஜய்

 

னிதாவின் வீட்டுக்கு திடீரென வருகை தந்த நடிகர் விஜய், அனிதாவின் சகோதரரிடம், “இறந்தது என் தங்கை; அண்ணனிடம் எப்போது வேண்டுமானாலும் உதவி கேளுங்கள்” என்று கூறி அனைவரையும் நெகிழவைத்துள்ளார்.

விஜய்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா. ப்ளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 'டாக்டராக வேண்டும்' என்ற தனது கனவு நிறைவேறிவிட்டதாக எண்ணியிருந்த அனிதாவுக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு தடையாக அமைந்தது. ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்த அனிதா, நீட் தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனிடையே, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்றார் அனிதா. ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, அனிதாவின் மருத்துவக் கனவு கானல் நீரானது. மனஉளைச்சலில் இருந்த அனிதா கடந்த 1 ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் திடீர் மரணம் தமிழக மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக அனிதாவின் இறுதிச்சடங்கில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பலரும் அனிதாவின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் குழுமூரில் உள்ள அனிதா வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். முக்கிய பிரமுகர்கள் எந்த இடத்துக்குச் சென்றாலும் சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். பின்னர் பாதுகாப்புக்கு மத்தியில், அந்தப் பிரமுகர்கள் செல்வார்கள். ஆனால், விஜயின் வருகை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கும் குறிப்பாக அனிதாவின் வீட்டாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அனிதாவின் வீட்டுக்கு விஜய் திடீரென வந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

அனிதா - மணிரத்னம்

நடிகர் விஜய், அனிதாவின் குடும்பத்தாரிடம் என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, அனிதாவின் சகோதரர் மணிரத்னத்திடம் பேசினோம்... “எனது தங்கையின் இறப்பு எங்களை மிகவும் பாதித்துவிட்டது. வீடே மயானமாக காட்சியளிக்கிறது. காலை வழக்கம் போல் எழுந்தோம். நாங்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், நடிகர் விஜய் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் வாரிச்சுருட்டி எழுந்தோம். அதற்கு அவர், 'மெதுவா எழுந்திருங்க' என்று சொன்னார். நான் சேர் எடுக்கச் செல்ல முயன்றேன். அதற்கு அவர், 'உங்களைத்தான் பார்க்க வந்தேன்.மெதுவா வாங்க'னு சொன்னார். பின்பு எங்களோடு ஒண்ணா தரையில் அமர்ந்து பேசத்தொடங்கினார்.

அனிதாவைப் பற்றி முழுமையாகக் கேட்டறிந்தார். ‘அனிதாவின் மருத்துவக் கனவு சிதைந்துவிட்டது' என்று நானும் எனது அப்பாவும் கண்ணீர் விட்டபோது அதற்கு அவர்,  'உங்களது கண்ணீர்  நாளை ஆனந்தக்கண்ணீராக மாறப்போகிறது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை' என்று நம்பிக்கை ஊட்டினார். அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த எண்ணியிருந்தேன். ஆனால், நான் வந்தால், அந்த நிகழ்வின் போக்கே வேறு கோணத்தில் திசை திருப்பப்பட்டுவிடும் சூழல் இருந்ததால் வராமல் தவிர்த்துவிட்டேன்' என்றுகூறி என் கையைப் பிடித்துக்கொண்ட விஜய், "எனக்கும் வித்யா என்று  ஒரு தங்கை இருந்தாள். அவள் இறந்துவிட்டாள். அவள் இறப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது. அதனால், இப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று எனக்கும் நன்றாகத் தெரியும். அனிதாவை என் தங்கையாகத்தான் பார்க்கிறேன். என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க. நான் செய்கிறேன். அனிதாவுக்கு நானும் ஒரு அண்ணன்தான் என்னிடம் உதவி கேட்க தயங்காதீர்கள்' என்றுஒரு போன் நம்பரை கொடுத்தது மட்டுமல்லாமல், பணத்தை எனது தந்தையிடம் கொடுத்தார். எவ்வளவு பணம் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்" என்று ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.'' என்று அழுகையோடே சொல்லிமுடித்தார் மணிரத்னம்.


டிரெண்டிங் @ விகடன்