வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (11/09/2017)

கடைசி தொடர்பு:20:00 (11/09/2017)

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை..!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடும் பொதுக்குழு கூட்டத்துக்கு பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக மாலை 7.15 மணிக்குத் தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அ.தி.மு.க பொதுக்குழு நாளை சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுக்கு தடைகோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தெரிவித்தார். மேலும் எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

எனவே, இந்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தார். வெற்றிவேல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இரு அணிகள் இணைப்பு என்பது அதிகாரபூர்வமானது இல்லை. சசிகலா இல்லாத நிலையில், டி.டி.வி.தினகரனே முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர்' என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் 7.15 மணிக்கு தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், பொதுக்குழுவுக்கு எதிராக புகழேந்தி பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், பொதுக்குழு கூட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பான வழக்கு அக்டோபர் 13-ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டனர். தீர்ப்புகள் மாறி மாறி வரும் சூழலில் நாளை பொதுக்குழு நடைபெறுவது சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளது.