Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமூக வலைதளங்களை உளவுபார்க்கும் `புராஜெக்ட் இன்சைட்’ எடுபடுமா?

உங்களுடைய புதிய சொகுசு கார் அல்லது காஸ்ட்லியான கடிகாரத்தை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்தால், `புராஜெக்ட் இன்சைட்' திட்டம் மூலம் வருமானவரித் துறை உங்களுடைய வீட்டு வாசல் முன் வந்து நிற்க வாய்ப்புள்ளது பற்றி உங்களுக்குத் தெரியுமா? 

புராஜெக்ட் இன்சைட்

மத்திய அரசு, பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பதை ஏற்கெனவே கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், அனைவருடைய வருமானம் மற்றும் சொத்து விவரங்களை எளிதாகக் கண்காணிக்க முடியும். இந்த நிலையில் இப்போது `புராஜெக்ட் இன்சைட்’ திட்டத்தின் மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களைத் திரட்ட வருமானவரித் துறை திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை, அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தகவல் தொழில்நுட்பத் துறையை அடிப்படையாகக்கொண்டு `புராஜெக்ட் இன்சைட்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மிகப்பெரிய தகவல்களை ஆராயும் திட்டமாகும். உங்களுடைய வருமானத்தையும் சமூக வலைதளத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களையும் சரிபார்க்கும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நீங்கள் வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்ததை எளிதாகக் கண்டறிய முடியும். 

உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு சொகுசு காரை வாங்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டால், வருமானவரி தாக்கல் படிவத்தில் தெரிவித்த உங்களின் வருமானத்துக்கும் சொகுசு கார் வாங்கியதற்கும் பொருத்தமாக இருக்கிறதா என வருமானவரித் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்வர். அப்படி இல்லையென்றால், உங்கள் மீது வருமானவரித் துறையினர் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. வருமானவரித் துறை `புராஜெக்ட் இன்சைட்’ திட்டத்துக்காக கடந்த ஆண்டு எல் அண்ட் டி இன்ஃபோடெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம், இதற்கான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கியுள்ளது. 

இந்த நிலையில் சமூக வலைதளங்களை உளவுபார்க்கும் `புராஜெக்ட் இன்சைட்’ திட்டம் குறித்து, ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாராயணனிடம் பேசினோம்... 

``வருமானவரித் துறையினரைப் பொறுத்தவரை, வரி செலுத்துவோர் எது செய்தாலும் அதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே வருகின்றனர். ஆனால், சமூக ஊடகங்களை வருமானவரித் துறையினர் நோட்டம் இடுவதாகச் சொல்வது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனெனில், வருமான செலுத்துவோரின் பான் கார்டு விவரங்களை எப்படி எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. சாதாரணமாக, வங்கிக் கணக்கு மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளிலிருந்தே வருமானவரித் துறையினரால் போதிய தகவல்களை எடுக்க முடிவதில்லை. இதில் வருமானவரி செலுத்துவோர், பான் எண் என அனைத்தும் இருந்தாலும் இரண்டு லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பினால், அதில் 20 ஆயிரம் பேரிடமிருந்து நோட்டீஸ் பதில் வந்தாலே அது பெரிய விஷயம். 

ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை, பெரும்பாலும் யாருமே உண்மையான தகவலைச் சொல்வதே கிடையாது. ஃபேஸ்புக்கில் பாதி பேர் வீட்டு முகவரி, பிறந்த தினம் எனப் பலதரப்பட்ட தகவல்களைக் கொடுப்பதில்லை. ஆனால், வருமானவரித் துறையினரைப் பொறுத்தவரை வரி செலுத்துவோரின் பான் எண்ணைச் சரிபார்க்க வேண்டும். இதுமட்டுமின்றி வருமானவரி செலுத்துவோரின் பெயர், அவருடைய தந்தை பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்கள் வேண்டும். இந்த மூன்றுமே அவசியம். ஃபேஸ்புக்கில் ஒருவர், `நான் ஆடி காரை வாங்கிவிட்டேன்' எனப் பதிவுசெய்கிறார் என்றால், ஏதாவது ஒரு லிங்க் இருந்தால் மட்டுமே அந்தத் தகவலை சரிபார்த்து நடவடிக்கை எடுக்க முடியும். 

2000-ம் ஆண்டில் மொபைல் போன் வாங்கினால், வருமானவரித் துறை நோட்டீஸ் வந்தது. அப்போது மொபைல் போன் ஒரு பெரிய ஆடம்பரப் பொருளாக இருந்தது. அதே மாதிரி கார் வாங்கினால்கூட நோட்டீஸ் வந்தது. இன்றும் இதுபோன்ற நடவடிக்கை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, வருமானவரித் துறை மூலம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்து இந்த ஆண்டு யார் யாரெல்லாம் வீடு வாங்கியிருக்கிறார்கள்; எங்கெங்கே ஃபிளாட் வாங்கியிருக்கிறார்கள்; என்ன விலையில் வாங்கியிருக்கிறார்கள்; எப்போது ரெஜிஸ்டர் செய்தார்கள்; யார் பெயரில் ரெஜிஸ்டர் செய்தார்கள்; அவர்களுடைய பான் எண் என்ன... என, பலதரப்பட்ட விஷயங்களை வருமானவரித் துறையினர் வாங்கிவருகின்றனர். இதேபோன்று ஆடி, பென்ஸ் என பெரிய கார் ஷோரூமில் இந்த ஆண்டு யார் யாரெல்லாம் கார் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல்களை வருமானவரித் துறை வாங்கி, வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறது.

இது, இன்று நேற்று அல்ல, கடந்த 7, 8 ஆண்டுகளாக இதுபோன்ற நடவடிக்கைகளை வருமானவரித் துறை மேற்கொண்டுவருகிறது. இவை அனைத்தும் உண்மையான தகவல்களாக இருக்கும். இவ்வாறு செய்யும்போது வருமானவரி செலுத்துவோரை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நான் ஒரு போஸ்ட் போடுகிறேன் என்றால், அந்தப் பதிவே 100 சதவிகிதம் சரியானதாக இருக்க வாய்ப்புகள் குறைவு. ஆகையால், இதிலிருந்தே தகவல்களைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது உண்மையில் மிகச் சிரமமான காரியம். இந்த நிலையில் சமூக வலைதளம் மூலம் வரி செலுத்துவோரைக் கண்காணிக்கப்படும் என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார் அவர். 

`வரும் பிப்ரவரி 18-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்காத மொபைல் எண், செயலிழப்பு செய்யப்படும்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒருவேளை சமூக வலைதளங்களை உளவுபார்க்கும் வகையில் ஆதாருடன் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைதளங்களை இணைக்கச் சொல்வார்களா? 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close