Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார் போற்றும் கவி பாரதி... நினைவுதினச் சிறப்புக் கட்டுரை!

மிழ் மொழியின் தனித்துவத்தை சுவைபட மட்டுமல்லாமல், சுவாரஸ்யத்துடன் விளக்கிய மாபெரும் கவிஞர்களில் சுப்ரமணிய பாரதியாரும் ஒருவர். இவரின் உணர்வெழுச்சியின்பால் பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் கனல் தெறித்தன. குழந்தைகளின் உணர்வுகள் முதல் கட்டிளம் காளையர்களின் உணர்வுகள் வரை அத்துணை உயிர்களின் உள்ளியல்போடு கலந்தவன் இந்த முண்டாசுக் கவிஞன்தான். ஆம், தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சம்கொள்ளாமல் தெளிவுடன் எடுத்துரைத்தவன் இவன்.

ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவனின் ஆக்கங்களை நிறுத்திவிட முடியாது. சமூக ஆர்வலன், பத்திரிகையாளன், எழுத்தாளன், பாடலாசிரியன், சுதந்திரப் போராட்ட வீரன், தமிழ் மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவன், எழுச்சிமிகு சிந்தனைகளின் ஏகலைவன் என பன்முகத்தன்மைகொண்ட தமிழன், பாரதி. இந்திய விடுதலைப் போரில் இவனின் தமிழ் பெரும்பங்காற்றியதன் காரணமாகத்தான் இவரை `தேசிய கவி' எனப் போற்றிப் புகழ்ந்தனர். தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்லாது, உலக இலக்கிய அரங்கிலும் மிகமுக்கிய இடத்தைப் பிடித்த இந்த மீசைக்கவிஞனின் நினைவுநாள் இன்று. தன் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் வார்த்தைகளால் வடிவம் கொடுத்த கோபக்காரக் கவிஞனின் நினைவலை கட்டுரை இது...

பாரதியார்

உயிராக்கம்:
சின்னசாமி ஐயர் - லட்சுமி அம்மாள் தம்பதிக்கு 1882-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார் சுப்ரமணிய பாரதியார்.  பிறப்பிலேயே தமிழின்பால் ஆர்வம் இருப்பதை அறிந்த பெற்றோர், அந்தக் குழந்தைக்கு தமிழ்க் கடவுளின் பெயரான சுப்ரமணியன் என்ற திருநாமத்தைச் சூட்டினர். குழந்தை வளர வளர, அதன் தமிழ் அறிவும் தமிழ் உறவுகள் மீதான அக்கறையும் சேர்ந்தே வளர்ந்தன.  இளமை ததும்பும் வயதிலேயே தனக்கான துணையாக தமிழ் மொழியைக் கொண்டார்.

இனிய பருவம்:
தன் சரீரத்துக்கான உணவைப் பெறுவதைவிட, தன் சிந்தனைக்கான உணவை வெகு எளிதாகப் பெற்றுத்தந்தது இவரின் தமிழ் ஆர்வம். தமிழ் மொழி மீதான சிந்தனைத் தெளிவும் பற்றும் வெகு விரைவிலேயே இவரை மாபெரும் புலவனாகப் பரிமளிக்கவைத்தன. தன் 11-ம் வயதிலேயே கவி புனையும் அறிவைப் பெற்றார்.

1897-ம் ஆண்டு பாரதியின் இல்லறத்தில் இனியாளாக பங்குகொண்டார் செல்லம்மா. இவர், பாரதியின் இலக்கியப் பணிகளுக்குப் பாலமாக இருந்தார். தன் கணவரின் சொல்லுக்கு மறுசொல் பேசாத இவர், வறுமையிலும் வறட்சியிலும் வாடிப்போனாலும், அகத்தில் மகிழ்ச்சியையும் முகத்தில் புன்சிரிப்பையுமே தனக்கான அணிகலன்களாகக் கொண்டு வாழ்ந்தார். 

பார் போற்றிய இலக்கியப் பணி:
தமிழ் மொழி மீதும், இலக்கியப் பணி மீதும் தணியாத ஆர்வம்கொண்டவர் பாரதி. ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளம், இந்தி என பலவேறு மொழிகளின் காவலனாகவும் திகழ்ந்தார். `சுதேசமித்திரன்' என்ற தமிழ் பத்திரிகையில் 1904-ம் ஆண்டு முதல் 1906-ம் ஆண்டு வரை உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இந்துக்களின் சுவாசமாக விளங்கும் பகவத் கீதையை 1912-ல் தமிழில் மொழிபெயர்த்தார். கவிதைகள் புனைவதோடு சமுதாயக் கட்டுரைகள், குழந்தைப் பாடல்கள் எனப் பல்வேறு வகையான பாடல்களும் எழுதினார். இவற்றில் சிலவற்றையே கண்ணன் பாட்டு, குயில் பாட்டு... போன்றவை.

சுதந்திரப் போராட்டத்தில் பாரதி:
இவனின் ஒவ்வொரு வார்த்தையும் ஆற்றல்மிக்கதாகவும் அக்னிக்குஞ்சுகளாவும் எழுச்சி கண்டன. குறிப்பாக, சுதந்திரப் போராட்டத்தின்போது இவரின் கருத்துகளும் கட்டுரைகளும் உணர்ச்சிப் பிழம்பாகவும், காட்டுக் கனலாகவும் எழுந்து விடுதலை உணர்வை உலகம் முழுக்க பறைசாற்றின. சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையான தமிழில் கவி புனைந்து கட்டுரைகள் எழுதி, மக்கள் மத்தியில் விடுதலை விழிப்பு உணர்வை உருவாக்கியதில் பாரதி, பார் போற்றும் கவிஞரானார். இவரின் எழுச்சிமிகு உரையில் தமிழர்கள் விழிந்தெழுந்ததைக் கண்ட ஆங்கிலேயர், பாரதியின் பல்வேறு படைப்புகளுக்குத் தடைவிதித்து, அவரை சிறையில் அடைத்தனர்.

தமிழ் இலக்கியம் தத்தெடுத்துக்கொண்ட அந்த மீசைக் கவிஞன், தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் மட்டுமல்லாது, அகில உலக இலக்கிய ஆர்வலர்களின் மூத்த மகனாக, தமிழ் மொழியின் தலைமகனாக விளங்கியது காலம் என்கிற காலனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லைபோலும். பாரதியின் காலத்தைச் சுருக்க எத்தனித்த காலன், யானை வடிவில் உருவெடுத்து தமிழ் போற்றும் நல்லுலகத்திடமிருந்து பாரதியைப் பிடிங்கிச் சென்றான். ஆம், சூழ்நிலை காரணமாக, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் யானையின் கால்களால் காயமடைந்து, உடல் நலிவடைந்து 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் தமிழ் உலகைவிட்டு பிரிந்தது பாரதி என்கிற சுப்பிரமணியனின் உயிர். இவரின் இழப்பு இயல் உலகுக்கு மட்டுமல்லாது, இசை மற்றும் நாடக உலகங்களுக்கும் பேரிழப்பாக இன்றும் கருதப்படுவதற்குரிய சாட்சியம்தான் இந்தக் கட்டுரை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close