நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரான திருப்பூர் மாநகரில் பழுதடைந்து கிடக்கும் சாலைகளை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று முற்றுகையிட்டனர். 

திருப்பூர் மாநகரப் போக்குவரத்தின் பிரதான சாலைகள் அனைத்தும் தற்போது மிகவும் மோசமான நிலையில் சீர்குலைந்து கிடக்கிறது. இதனால் ஏராளமான விபத்துகளும், போக்குவரத்து நெரிசல்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. போதாக்குறைக்கு மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளும் மிகவும் ஆமை வேகத்தில்தான் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. சமீபகாலமாக போக்குவரத்து நெருக்கடி என்பது திருப்பூர் மக்களின் தலையாயப் பிரச்னையாக உருவெடுத்து இருக்கிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் வர்த்தகம் நடைபெறும்

இந்நகரத்தில் சாலை வசதிகூட கேள்விக்குரியாக இருப்பது பொதுமக்களிடையே மிகவும் வருத்தத்தையும் வேதனையையும் உண்டாக்கி வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் பழுதடைந்து மோசமான நிலையில் இருக்கக்கூடிய சாலைகளை கூடிய விரைவில் செப்பனிட வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பழுதடைந்து காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைப்பதாக உத்திரவாதம் அளித்தனர். அதைத்தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!