வெளியிடப்பட்ட நேரம்: 08:31 (12/09/2017)

கடைசி தொடர்பு:15:41 (12/09/2017)

ஐந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு..! அதிர்ச்சித் தகவல் #VikatanExclusive

அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கவேண்டி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த வேளையில் `அரசுப் பள்ளி மாணவர்கள் ஐந்து பேருக்கு மட்டுமே இந்த ஆண்டு மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது' என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. 

அரசு பள்ளி மாணவர்கள்

“கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 30 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வின் வழியாக அரசுப் பள்ளியில் படித்த வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே வாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள்'' என்று மருத்துவக் கல்வி இயக்ககத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஒற்றை இலக்கத்தில் இடம் கிடைத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. 

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 3,534 இடங்களில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 2,314 பேருக்கும், சி.பி.எஸ்.இ மற்றும் இதர பாடத்திட்டத்தில் படித்த 1,220 பேருக்கும் இடம் கிடைத்திருக்கிறது. 2,314 பேரில் தனியார்ப் பள்ளியில் படித்த 2,309 பேர், மருத்துவப் படிப்பு படிக்க உள்ளனர். அதாவது 99.9 சதவிகிதம் பேர் தனியார்ப் பள்ளியில் படித்தவர்கள். அரசுப் பள்ளியில் படித்த 0.14 சதவிகிதம் பேருக்கு மட்டும் இடம்கிடைத்திருக்கிறது. 

அரசுப் பள்ளியில் படித்த ஐந்து பேரில் இரண்டு பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரியிலும், மீதி மூன்று பேருக்கு சுயநிதி மருத்துவக் கல்லூரியிலும்தான் இடம் கிடைத்திருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த இரண்டு பேரில் ஒருவர் தருமபுரி மருத்துவக் கல்லூரியிலும், மற்றொருவர் சிவகங்கை மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்திருக்கிறார்கள். ஐந்து பேரில் இரண்டு பேர் மாணவர்கள்; மூன்று பேர் மாணவிகள். 

கடந்த ஆண்டுகளில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்கெனவே படித்து முடித்தவர்கள் இடம்பெற முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 1,004 பேருக்கு இடம் கிடைத்திருக்கிறது. இதன்மூலம் ஓராண்டு பயிற்சி பெற்றவர்கள் பெருமளவில் மருத்துவ இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். அதாவது, 2016-17-ம் கல்வியாண்டில் +2 படித்தவர்கள் 1,310 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்த 30 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 1,220 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் கடந்த ஆண்டு படித்த 351 மாணவர்களும் அடக்கம். 

அரசு பள்ளி மாணவர்கள்

வெளி மாநிலத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் 422 பேருக்கு இடம் கிடைத்திருப்பதுதான், மற்றுமோர் அதிர்ச்சித் தகவல். இதுவரை வெளி மாநிலத்தில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் தமிழக மருத்துவப் படிப்பில் சேராத நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வின் மூலம் 12 சதவிகித இடங்களை நிரப்பியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பணியாற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் 28 பேருக்கும் இடம் கிடைத்திருக்கிறது. 

இந்த ஆண்டு, பெருநகரங்களில் படித்த மாணவர்களுக்கு அதிக அளவில் இடம் கிடைத்திருக்கிறது. உதாரணத்துக்கு, கடந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் 113 பேர் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், இந்த வருடம் 471 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். இதைப்போலவே, கோயம்புத்தூர் 182, சேலம் 192, மதுரை 179, திருநெல்வேலி 162 பேர், காஞ்சிபுரம் 140, திருவள்ளூர் 158 பேர், வேலூர் 153 பேரும் மருத்துவம் படிக்க வாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள். 

கடந்த ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 957 பேர், தருமபுரியைச் சேர்ந்த 225 பேர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 338 பேர் என 50 சதவிகித இடத்தை நிரப்பியிருக்கிறார்கள். ஆனால், இந்த ஆண்டு மூன்று மாவட்டங்களையும் சேர்த்து 273 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைத் தவிர, இதர மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்திருப்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 

`தமிழ்நாடு மாணவர்களுக்குக் கடந்த ஆண்டு மட்டும் விலக்கு' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், தொடர்ந்து விலக்குப் பெறுவோம் என்று தமிழக அரசு தவறான நம்பிக்கையை ஏற்படுத்தியதும், மாற்று ஏற்பாடு செய்யாததுமே தற்போதைய பின்னடைவுக்குக் காரணம். 

வாய் கிழியப் பேசும் அரசியல்வாதிகளே... கிராமப்புற மாணவர்களுக்கு இனியாவது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்!