வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (11/09/2017)

கடைசி தொடர்பு:10:51 (12/09/2017)

வீரபாண்டி ராஜாவால் உயிருக்கு ஆபத்து..! இது அ.தி.மு.க ஊராட்சி மன்றத்தலைவரின் குரல்

தி.மு.க-வைச் சேர்ந்த வீரபாண்டி ராஜாவால் தனது உயிருக்கு ஆபத்து என்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க உறுப்பினர் சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 

''தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் வீரபாண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராஜா. அவர் என்னை மிரட்டி ரூ.1 கோடி வாங்கியது மட்டுமல்லாமல் என்னைக் கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார். அவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நான் மரணமடைந்தால் அதற்கு வீரபாண்டி ராஜாதான் காரணம்'' என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி அவரிடம் விரிவாகக் கேட்டபோது, '' என் பேரு சிவசுப்ரமணியம். சேலம் 5 ரோடு பகுதியில் குடியிருக்கிறேன். நான் அ.தி.மு.க-வில் உறுப்பினராகவும், வீரபாண்டி ஒன்றியம் மூடுதுறை ஊராட்சிமன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறேன். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். கடந்த 2009-ம் ஆண்டு வாழப்பாடி டவுன் அருகில் 50 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்தது. அந்த நிலத்தின் உரிமையாளர்களான கரூரைச் சேர்ந்த ராஜன், ரகுசுந்தர் என்பவர்களிடமிருந்து 12 கோடிக்கு வாங்கினேன். 

வாங்கிய நிலத்தை சுற்றிப் பார்ப்பதற்காக சென்றேன். அப்போது நான் வாங்கிய நிலத்தில் சுமார் 3 1/2 ஏக்கரை மாது என்கின்ற மாதையன், சுப்பிரமணி ஆகியோர் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் நான் இந்த நிலத்தையெல்லாம் வாங்கி விட்டேன் என்றேன். பதிலுக்கு அவர்கள் இந்த நிலத்தில் எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்றார்கள். பிறகு அவர்களிடம் உங்களுக்கு இந்த நிலத்தை என்ன உரிமை இருக்கு, நிலத்தில் எந்த வில்லங்கமும் இல்லாததால் நான் வாங்கினேன். சரி எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சொல்லுங்கள் தீர்த்துக்கொள்ளலாம் என்றேன்.

அதற்கு அவர்கள், ''இந்தப் பகுதியில் இவ்வளவு பெரிய சொத்து வாங்குகிறீர்கள் என்றால் வீரபாண்டி ராஜா அண்ணனை கேட்காமல் எப்படி வாங்குனீங்க. சரி எதுவாக இருந்தாலும் வீரபாண்டியாரின் உதவியாளர் கெளசிக பூபதியிடம் போய்ப் பேசிக் கொள்ளுங்கள்'' என்றார்கள். அதையடுத்து, கெளசிக பூபதியை சந்தித்துப் பேசினேன். அவன் எங்க ஆளுதான். நீ பாட்டுக்கு அவ்வளவு பெரிய சொத்தை வாங்கி வித்துட்டு சம்பாரிச்சுட்டு போயிடுவ. நாங்க பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? 10 கோடி கொடு க்ளியர் பண்ணி கொடுக்கிறோம் என்றார். வாங்கியதே 12 கோடிக்கு வாங்கினேன். 10 எப்படி தர முடியும், என்று கெஞ்சினேன். அவர் 10 கோடியில் இருந்து ஒரு பைசா கூட குறைக்க மாட்டேன்னு சொல்லிட்டார். நான் பல முறை அவரைச் சந்தித்துப் பேசினேன். இறுதியாக ஒரு நாள். இது ராஜா கவனத்துக்குப் போயிடுச்சு. நீ எதுவாக இருந்தாலும் இனி ராஜாவைப் போய்ப் பாரு என்று கூறிவிட்டார். 

அதையடுத்து வீரபாண்டி ராஜாவைப் போய்ப் பார்த்தேன். 10 கோடியும், ஒரு ஏக்கர் நிலமும் கொடு என்றார். சார் அவ்வளவு தொகை எப்படி சார் கொடுக்க முடியும் என்றேன். அந்த இடமெல்லாம் நல்ல விலைக்குப் போகுது. கொடுக்கலாம் கொடு, எல்லாம் க்ளியர் பண்ணிக் கொடுத்து விடுகிறேன் என்றார். பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூபாய் 9 கோடியும் 1 ஏக்கர் நிலமும் தருவதாக ஒப்புக்கொண்டேன். 

அதையடுத்து மணி, ரகுநாத், செல்வகுமார், தங்கராஜ் ஆகியோரைச் சாட்சியாக வைத்து 27.11.2010 அன்று ரொக்கமாக ஒரு கோடி ரூபாயை ராஜாவிடம் கொடுத்தேன். அருகில் இருந்த அவரது உதவியாளர் சேகரிடம் கொடுத்துப் பணத்தை எண்ணிப் பார்க்கச் சொன்னார். அவரும் எண்ணிப் பார்த்துட்டு சரியாக இருப்பதாகச் சொன்னார். சரி மீதிப் பணத்தையும் சீக்கிரத்தில் கொடுத்துவிடு என்றார். பிளாட் விற்க விற்க கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிட்டு வந்துட்டேன். 

ஆனால், நிலத்தை கிளியர் பண்ணி கொடுக்கவே இல்லை. ராஜாவிடம் பல முறை நடையாய் நடந்து கெஞ்சிப் பார்த்தும் நிலத்தை அவர் க்ளியர் செய்து கொடுக்கவில்லை. இறுதியாக நான் கொடுத்த ஒரு கோடியைக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டேன். அதற்கு ராஜா, ''இனி நீ இந்த கேட் பக்கம் வந்தால் உயிரோடு போக மாட்டாய் கொன்று விடுவேன்' என்று கெட்ட வார்த்தையில் ஒருமையில் கேவலமாகத் திட்டினார். 

அதையடுத்து, கோவை ஐ.டி அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் சேலம் குற்றவியல் துறைக்கு பார்வேர்டு செய்தார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையில் சேலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறேன். முதல் வாய்தாவுக்கு ராஜா வரவில்லை. இரண்டாம் வாய்தா கடந்த 25.10.2017 நடந்தது. அதற்கும் அவர் வராததால் வாரண்ட் அனுப்பியிருக்கிறார்கள். இதனால் எந்த நேரத்திலும் ராஜாவாலும், அவர்களுடைய ஆட்களாலும் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்றார்.  

இதுபற்றி வீரபாண்டி ராஜாவிடம் கேட்டபோது, 'இது முழுக்க முழுக்க தவறான தகவல். அவர் அன்றைய எஸ்.பி. கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அதில் உண்மை இல்லை என்று சொல்லி விட்டார்கள். அதிகாரிகள் மாறினால் அவர்களிடம் மீண்டும் கொடுப்பார். அந்த நிலத்துக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. அவர் அ.தி.மு.க.கட்சியைச் சேர்ந்தவர். என் பெயரைக் கலங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க