வெளியிடப்பட்ட நேரம்: 23:28 (11/09/2017)

கடைசி தொடர்பு:10:38 (12/09/2017)

எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தை மேலும் உயர்த்தக்கோரி கோவில்பட்டியில் சிறப்புப் பூஜை!

தமிழக எம்.எல்.ஏ-க்கள்  இன்பச் சுற்றுலாவாகப் பல நாடுகளுக்குச் செல்லும் வகையில் அவர்களது சம்பளத்தை மேலும் உயர்த்திடக்கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பா.ம.க, காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சியினர் நூதனமுறையில் பிள்ளையார் கோவிலில் சிறப்புப் பூஜை செய்தனர். 

special pooja in kovilpatti

இது குறித்து அவர்களிடம் பேசிய போது, ‘’தமிழக எம்.எல்.ஏ-க்கள் அடிக்கடி கூவத்தூர், பெங்களூர், புதுச்சேரி என ஊர் ஊராகச் சென்று ரிசார்ட்டுகளில் தங்கி கடற்கரையில் வாக்கிங் செல்வது, ஊஞ்சல் விளையாடுவது, டான்ஸ் ஆடுவது மற்ற எம்.எல்.ஏ-க்களுடன் பேசி பொழுதைப் போக்குவது அவர்களது தலைமை சொன்னால் மட்டும் தொகுதிக்கு வருவது, மீண்டும் அழைத்தால் அடுத்த விமானத்தில் கிளம்பி ஆஜராகிவிடுவது என அவரவர் தலைமையும், ஆதரவாளர்களும் சொல்வதை மட்டும் கேட்டு அதன்படி நடந்து வருகின்றனர். தொகுதியையும் மக்களையும் மறந்துவிட்டனர்.  தற்போது எம்.எல்.ஏ-க்களின் மாதச்சம்பளம் ரூ.55 ஆயிரத்திலிருந்து இரு மடங்காக உயர்த்தி ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கி வரப்படும் இச்சம்பளப் பணம் அவர்களுக்குப் போதாது. இதனை மேலும் உயர்த்தியோ, மூன்று மடங்காக்கியோ அறிவித்தால் எம்.எல்.ஏ-க்கள் இன்னும் பல நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கு உதவியாக இருக்கும்.

specila pooja in kovilpatti

இவர்களுக்குத் தொகுதிப் பக்கம் வரவேண்டுமென்ற எண்ணம் இல்லை. அதனால் அவர்களது விருப்பப்படியே மீதமுள்ள குறை ஆட்சிகாலத்தையும் கழிக்க அவர்களது சம்பளத்தை உயர்த்த வேண்டி பிள்ளையாருக்குத் தேங்காய், பழம்  உடைத்து நூதன முறையில் வழிபடுகிறோம். அரசு ஏற்கெனவே ரூ.45,119 ரூபாய் வரை கடனில் தவிக்கும் சூழ்நிலையில், வறட்சியில் வாடும்விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எம்.எல்.ஏ-க்களுக்குச் சம்பளத்தை உயர்த்தியதே தவறு. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலவழக்கும் தொடுத்தார். திரிபுராவில் எம்.எல்.ஏ-க்கள் ரூ.17,500 ஐ மாதச்சம்பளமாகப் பெற்றுக்கொண்டு மக்கள் பணி செய்யும் நிலையில், அதைவிட 6 மடங்கு கூடுதலாக தமிழக எம்.எல்.ஏ-க்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு அடிக்கடி சுற்றுலா சென்றுவிடுகின்றனர்’’ என்றனர். 

கோவில்பட்டி, தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள ஸ்ரீ ஜெயகணபதி ஆலயத்தில் விநாயகருக்கு மாலை அணிவித்து, பன்னீர் சாற்றி தேங்காய், பழம் உடைத்து கற்பூரம் காட்டி நூதன முறையில் வழிபாட்டில் ஈடுபட்டனர். பூஜை முடிந்ததும் கோவிலுக்கு வெளியே வந்து எம்.எல்.ஏ-க்களைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க