பஞ்சாப் ரெஜிமென்ட் 250-வது வருடம்! - கடலூரில் இந்திய ராணுவத்தினர் மரியாதை


இந்திய ராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்ட் பிரிவின் 250- வது வருடம் தொடங்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, கடலூரில் இதன் நினைவுத் தூணுக்கு இந்திய ராணுவத்தினர் மரியாதை செலுத்தினர்.

கடந்த 1767- ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது இந்திய ராணுவத்தில் கேப்டன் ரிச்சட்மேத்யு அவர்களால் கடலூரில் பஞ்சாப் ரெஜிமென்ட் பிரிவு முதன் முதலில் தொடங்கப்பட்டது. இதன் 225-வது வருட நினைவுத் தூண் கடந்த 1992-ம் ஆண்டு கடலூர் மாவட்டக் காவல் காண்காணிப்பு அலுவலகத்தில் நிறுவப்பட்டது. இப்பிரிவின் 250-வது வருடம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக, இந்திய ராணுவத்திலிருந்து லெப்டினல் நிகில்மோகன், சபேதார் மேஜர்சிங் தலைமையில் ஆறு இராணுவ வீரர்கள் சகிதம் கடலூர் வந்து அத்தூணுக்கு நினைவு மலர்வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரும் கலந்துகொண்டார்.


  

இப்பிரிவு, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்துக்கு ஆதரவாகப் புதுவை, சோளிங்கர் போன்ற பகுதிகளில் போரிட்டு வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்துக்குள் ஊடுறுவி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இப்பிரிவின் அடையாளமாக இன்று, கடலூரிலிருந்து புதுவை, சோளிங்கருக்கு இருசக்கரவாகனத்தில் பயணம் செய்து இவ்வீரர்கள் மீண்டும் கடலூர் திரும்புகிறார்கள்.
                                - 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!