பொதுக்குழுவில் சசிகலா குடும்பத்துக்கு எதிராகச் சீறிய பா.வளர்மதி!

''ஆட்சியைக் கலைப்போம் என்று சொல்பவர்கள் ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்'' என்று சசிகலா குடும்பத்தினரை பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

சசிகலா, தினகரன் ஆகியோரின் எதிர்ப்புக்கு மத்தியில், அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''ஆட்சியைக் கலைப்போம் என்று சொல்பவர்கள் ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியை விரட்டுவோம் என மிரட்டுபவர்கள் ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவர்கள்.

ஆட்சியை வீழ்த்துவோம் என்பவர்களிடம் சுயநலத்தைவிட வேறென்ன இருக்க முடியும். அ.தி.மு.க-வைக் காப்பாற்ற ஜெயலலிதா எவ்வளவு பாடுபட்டார் என்பது தொண்டர்களுக்குத் தெரியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இல்லாத நிலையில் 2-வது முறையாக பொதுக்குழுவை நடத்தியுள்ளோம். முதல்வர் பழனிசாமி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி, ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருகிறார்" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் செய்தியை பொள்ளாச்சி ஜெயராமன் வாசித்தார். பின்னர், பொதுக்குழு தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். முதல் தீர்மானமே, டி.டி.வி.தினகரன் பதவியும் செல்லாது, அவர் வழங்கிய பொறுப்புகளும் செல்லாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, கட்சியின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், கட்சியின் பொதுச் செயலாளர்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். பொதுக்குழுவில் எந்தத் தீர்மானம் நிறைவேற்றினாலும் அது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பமாக இருக்கிறது" என்று கூறினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!